/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அலைபேசி டவர் பணி முடிந்தும் இணைப்பு வழங்காததால் தவிப்பு! மலை கிராம மக்கள் தொலை தொடர்பு வசதியின்றி சிரமம்
/
அலைபேசி டவர் பணி முடிந்தும் இணைப்பு வழங்காததால் தவிப்பு! மலை கிராம மக்கள் தொலை தொடர்பு வசதியின்றி சிரமம்
அலைபேசி டவர் பணி முடிந்தும் இணைப்பு வழங்காததால் தவிப்பு! மலை கிராம மக்கள் தொலை தொடர்பு வசதியின்றி சிரமம்
அலைபேசி டவர் பணி முடிந்தும் இணைப்பு வழங்காததால் தவிப்பு! மலை கிராம மக்கள் தொலை தொடர்பு வசதியின்றி சிரமம்
ADDED : மார் 24, 2024 05:45 AM

போடி: போடி அருகே முந்தல் மலைக் கிராமத்தில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்கும் பணி முடிந்து 2 மாதங்களாகியும் இணைப்பு வழங்காததால் தொலை தொடர்பு வசதியின்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே குரங்கணி மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 22 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்டேஷன், அதனை சுற்றி கொழுக்குமலை, முட்டம், முதுவாக்குடி உள்ளிட்ட பல மலைக்கிராமங்கள் உள்ளன.
குரங்கணி டாப் ஸ்டேஷன் வழியாக மூணாறு செல்வதால் 40 கி.மீ., தூரம் குறைகிறது. செல்லும் வழியில் நீர்வீழ்ச்சிகள், பசுமையான மலை முகடுகள் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு தொலை தொடர்பிற்கான அலைபேசிக் கான டவர் வசதி இல்லை.
5 ஆண்டுகளுக்கு முன்பு கொழுக்குமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலியாயினர். அலைபேசி டவர் வசதி இல்லாததால் அங்கிருந்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிப்பிற்குள்ளானவர்களை மீட்க சிரமம் ஏற்பட்டது.
இது போன்ற சூழலை தவிர்க்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் குரங்கணியில் அலைபேசி டவர் அமைக்க சர்வே செய்து 4 ஆண்டுகள் ஆகியும் திட்டம் கிடப்பில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
மூன்று இடங்கள் தேர்வு:
இச் செய்தியின் எதிரொலியால் போடி முந்தல், குரங்கணி அருகே கொட்டகுடி, பெரியகுளம் அருகே அகமலை, தேவாரம் அருகே பளிமுத்தன் கரடு பகுதியில் யூனிவர்சல் சர்வீஸ் அப்லிகேஷன் திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அலைபேசி டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 7 மாதங்களுக்கு முன்பு முந்தலில் அலைபேசி டவர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் இணைப்பு வழங்கவில்லை. மற்ற பகுதிகளில் அலைபேசி டவர் அமைக்கப்படாமல் உள்ளன. டவருக்கு இணைப்பு வழங்காததால் மலைக்கிராம மக்கள் வெளி உலக தொடர்பு இன்றி சிரமம் அடைகின்றனர்.
எனவே, மலைக் கிராம மக்களின் சிரமங்களை தவிர்க்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

