/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளைச்சல் இருந்தும் வெளி மாநில வரத்தால் புளி விலை வீழ்ச்சி: விவசாயிகள், சிறு வியாபாரிகள் பரிதவிப்பு
/
விளைச்சல் இருந்தும் வெளி மாநில வரத்தால் புளி விலை வீழ்ச்சி: விவசாயிகள், சிறு வியாபாரிகள் பரிதவிப்பு
விளைச்சல் இருந்தும் வெளி மாநில வரத்தால் புளி விலை வீழ்ச்சி: விவசாயிகள், சிறு வியாபாரிகள் பரிதவிப்பு
விளைச்சல் இருந்தும் வெளி மாநில வரத்தால் புளி விலை வீழ்ச்சி: விவசாயிகள், சிறு வியாபாரிகள் பரிதவிப்பு
ADDED : மார் 07, 2024 06:02 AM

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், சின்னமனூர், கோம்பை, உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, பூசனம்பட்டி, போடி, ஆண்டிபட்டி, பகுதிகளில் புளி விளைச்சல் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் விளையும் புளி தமிழகம், மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் சீசனில் கிடைக்கும் புளியை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்ட குடோன்களில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடைகளில் சில்லறை விலையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.80 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் விதை நீக்காத புளியை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். தற்போது தேனி மாவட்டத்தில் புளிய மரங்களில் அறுவடை சீசன் துவங்கி உள்ளது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள், சிறு வியாபாரிகள் விலை குறைவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புளி வியாபாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் புளி விளைச்சல் 2000 டன் வரை உள்ளது. பெரிய வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து குளிர் சாதன குடோன்களில் இருப்பு வைக்கின்றனர். விலை கிடைக்கும்போது அவற்றை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. விவசாயிகள் சிறு வியாபாரிகளுக்கு குடோன் வசதி இல்லாததால் பெரிய வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுத்து விடுகின்றனர். தற்போது ஆந்திரா, மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்துகொண்டு வரப்படும் புளியை கிலோ ரூ.30க்கு கொள்முதல் செய்து இருப்பில் வைக்கின்றனர். இதனால் உள்ளூரில் விளையும் புளிக்கு விலை கிடைக்காமல் பாதிப்பிற்குள்ளாகின்றனர். புளிய மரங்களில் பழத்தை பறித்து, தட்டி தோல் நீக்கி, காய வைப்பதற்கு கூடுதல் செலவாகிறது.
விற்பனைக்கு கொண்டு செல்லும்போது விலை கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள், சிறு வியாபாரிகள் தான். வியாபாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள புளி விலையை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

