/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணையை கொண்டு வர எதிர்ப்பு தமிழக விவசாயிகள் குமுளி லோயர்கேம்பில் முற்றுகை
/
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணையை கொண்டு வர எதிர்ப்பு தமிழக விவசாயிகள் குமுளி லோயர்கேம்பில் முற்றுகை
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணையை கொண்டு வர எதிர்ப்பு தமிழக விவசாயிகள் குமுளி லோயர்கேம்பில் முற்றுகை
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணையை கொண்டு வர எதிர்ப்பு தமிழக விவசாயிகள் குமுளி லோயர்கேம்பில் முற்றுகை
ADDED : செப் 23, 2024 02:37 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கேரள தமிழக எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணையின் நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை கேரளா 1979ல் பலவீனமடைந்து விட்டது எனக்கூறி 136 அடியாக நிலை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திடலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் அணையில் தண்ணீரை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க கேரளாவில் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பல இடங்களில் இதற்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்., 1 முதல் முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாது காப்பு ஆணைய கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதவிர 2022ல் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதங்களுக்குள் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாகஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
இது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் குமுளி லோயர்கேம்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கவுரவத் தலைவர் சலேத்து தலைமையில் லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி முற்றுகையிட சென்றனர்.
மலைப் பாதையில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே டி.எஸ்.பி., செங்கோட்டு வேலவன், போலீசார் தடுத்து நிறுத்தினர். கேரள அரசைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், 58ம் கால்வாய் விவசாய சங்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, 18ம் கால்வாய் விவசாய சங்கம், ஹிந்து எழுச்சி முன்னணி, கடலுார் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, கட்சி சார்பற்ற விவசாய சங்கம், ஏர்முனை விவசாய சங்கம், முல்லைச் சாரல் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.