/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ்ப்புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
தமிழ்ப்புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2025 06:19 AM

தேனி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்கு வந்து வழிபட்டனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனியில் பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
விஷுக்கனி பூஜை
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விஷுக்கனி பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து வழிபட்டனர். 18 படிகளில் விளக்கேற்றி பக்தர்கள் படி பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன், பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே வராகநதியில் ஆண், பெண் மருதமரம் நடுவே குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் இருந்து தீர்த்தத்தொட்டி மண்டபத்தில் எழுந்தருளிய பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டன.
வரதராஜப் பெருமாள், கம்பம் ரோடு காளியம்மன், பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர், ஷீரடி சாய்பாபா, லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கம்பம்: சுருளி அருவியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். துாவானம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் மாலை திறந்து விடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று மதியம் 12:00 மணிக்கு மேலும் முதல் நாள் அருவியில் விழுந்த தண்ணீரின் அளவே, மறுநாளும் விழுந்தது. ஆனால் அருவியில் குளிக்க மக்கள் கூட்டம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கம்பம் ரேஞ்சர் பிச்சை மணி தலைமையில் வனத்துறையினர், பொது மக்களை வரிசையில் நிறுத்தி வைத்தனர்.
பின்னர் பத்து பத்து பேர் என அனுமதி வழங்கி குளிக்க அனுமதித்தனர். 10 நிமிடங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் அனுமதிக்கப்பட்டது. இதனால் பொது மக்களை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.
அருவியில் குளித்த பின்னர் இங்குள்ள பூதநாராயணர், வேலைப்பர், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பொது மக்கள் பங்கேற்றனர், ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அன்னதானம் நடந்தது. சிறப்பு பூஜைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்திருந்தார்.
கம்பம் கம்ப ராயப்பெருமாள் கோயில், வேலப்பர் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், யோக நரசிங்க பெருமாள் கோயில்களில் நடந்த பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
போடி: போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
மூலிகை கலந்த தீர்த்த சுனை நீரில் பக்தர்கள் நீராடியும், முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து முருகனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
போடி தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திர புத்திரனாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
ஐயப்பன் கோயிலில் கனிகள் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.