/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
24 பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.37 கோடி மோசடி: ஆசிரியை கைது
/
24 பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.37 கோடி மோசடி: ஆசிரியை கைது
24 பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.37 கோடி மோசடி: ஆசிரியை கைது
24 பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.37 கோடி மோசடி: ஆசிரியை கைது
ADDED : நவ 30, 2024 02:45 AM

தேனி:தேனியில் 24 பேரிடம் ரூ.1.37 கோடி பெற்று அரசு வேலை வாங்கித்தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்த வழக்கில், இறந்த சிறப்பு எஸ்.ஐ., ராமசாமியின் மனைவி ஆசிரியை மகாலட்சுமியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி வண்டியூரைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பிரகாஷ் 41. இவருக்கு 2017 ல் கொடுவிலார்பட்டி ஐஸ்வர்யாநகர் சிறப்பு எஸ்.ஐ., ராமசாமி மனைவி சிறப்பு ஆசிரியை மகாலட்சுமி அறிமுகமானார்.
இவர் வருஷநாடு கள்ளர் பள்ளியில் தற்காலிகமாக பணி செய்தார். கண்டக்டரிடம் ஆசிரியை, ''தனக்கும், திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திரகுமாருக்கும், ஆண்டிபட்டி பாலமுருகனுக்கும் அரசு அதிகாரிகள் பலரை தெரியும். ஒரு நபருக்கு ரூ.8 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவோம்,'' என்றார்.
அதை நம்பிய பிரகாஷ், உறவினர் முத்துக்குமாருக்கு அரசுப்பணி பெற ரூ.8 லட்சத்தை நாகேந்திரகுமார், மகாலட்சுமியிடம் வழங்கினார்.
பிரகாஷூக்கு தெரிந்த 7 பேரிடம் அரசு வேலைக்காக ரூ.48 லட்சத்தை இருவரும் பெற்றுள்ளனர். மேலும் முத்துக்குமார் உட்பட 8 பேருக்கான பணி நியமன ஆணைகளையும் இருவரும் வழங்கினர்.
இந்த ஆணைகளை அதிகாரிகளிடம் காண்பித்த போது, அவை போலி என தெரிய வந்தது. மகாலட்சுமி, நாகேந்திரக்குமார், பாலமுருகன் மூவரும் இணைந்து 24 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.ஒரு கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் பெற்று, மோசடி செய்துள்ளது தெரிந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க பிரகாஷ் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் பாலமுருகன், நாகேந்திரக்குமார், மகாலட்சுமி மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நேற்று மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.