ADDED : நவ 30, 2024 02:24 AM
ஆண்டிபட்டி,:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே சீலமுத்தையாபுரத்தில் மூதாட்டி வெள்ளையம்மாள் 72, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.7.95 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சீலமுத்தையாபுரம் சக்கணத்தேவர் மனைவியான வெள்ளையம்மாள் 72, பஞ்சு வியாபாரம் செய்கிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். வெள்ளையம்மாள் 120 பவுன் நகைகளை வீட்டில் வைத்திருந்தார். மகள்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள 76 பவுன் நகைகளில் 25 பவுன் நகைகளை அடகு வைத்து பஞ்சு வியாபாரத்தில் முதலீடு செய்தார். மீதமுள்ள 25 பவுன் நகைகளை தனது இளைய மகள் பாக்கியலட்சுமி விசேஷத்திற்கு அணிந்து செல்ல இரவல் கொடுத்திருந்தார். வீட்டின் பீரோவில் மீதமுள்ள 26 பவுன் நகைகளை வைத்திருந்தார். நகைகளை மார்ச் 10ல் பார்த்துள்ளார்.
இந்நிலையில் மார்ச் 17ல் மகள் வாங்கிச் சென்ற 25 பவுன் நகைகளை திரும்ப வாங்கி பீரோவில் வைக்க திறந்த போது அதிலிருந்த 26 பவுன் நகைகளை காணவில்லை. வெள்ளையம்மாள் புகாரின்படி இன்ஸ்பெக்டர் கண்மணி, எஸ்.ஐ., ஜெகநாதன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.