/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மாவட்ட தலைநகர் தேனி நகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
/
சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மாவட்ட தலைநகர் தேனி நகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மாவட்ட தலைநகர் தேனி நகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மாவட்ட தலைநகர் தேனி நகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
ADDED : நவ 24, 2024 07:03 AM

தேனி : மாவட்ட தலைநகரான தேனி நகராட்சியில் பல பகுதிகளில் குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. துாய்மை பணிக்கான ஒப்பந்த நிறுவனம் குறைந்தளவு ஆட்களை வைத்து பணி மேற்கொள்வதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது பொதுமக்கள், கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 5 மண்டலமாக பிரித்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வீடுகளில் குப்பை வாங்குதல், வார்டுபகுதிகளில் குப்பை சேகரித்தல். மக்கும், மக்காத குப்பையாக பிரித்து உரமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைகளுக்கு வழங்க வேண்டும். நகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 57 பேர் உள்ளனர். போதிய நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் 'ராம் அண் கோ' என்ற நிறுவனத்திற்கு துாய்மை பணி மேற்கொள்ள 2023-2024 ஓராண்டிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந் நிறுவனம் தினமும் 140 பேருடன் துாய்மை பணி செய்து தினமும் 33 டன் குப்பை கையாள வேண்டும்.
நிறுவனம் சேகரிக்கும் குப்பைக்கு டன் ஒன்றிற்கு ரூ.4145 வீதம் ரூ.1.36 லட்சம் தினமும் வழங்கப்படும். மாதம் சுமார் ரூ.41 லட்சம் வரை நகராட்சி செலவிடுகிறது.
ஒப்பந்த நிறுவனம் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டது. இதில்சேகரிக்கப்படும் குப்பை 4 இடங்களில் உள்ள நுண்உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரித்தனர்.
அடுத்தடுத்த மாதங்களில் பணியாளர்களை குறைத்து பணி செய்தனர். துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தப்புக்குண்டு குப்பை கிடங்கில் குப்பை கொட்ட நீதிமன்றம் தடை விதித்தது.
சுகாதாரம் பாதிப்பு
நகரின் சுகாதாரம் சில மாதங்களாக கடுமையாக பாதித்துள்ளது. பொது மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கவுன்சிலர்கள் திணறுகின்றனர். நகராட்சி கூட்டத்தில் நகரின் சுகாதாரம் பாதுகாக்க கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்து தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். பின் பா.ஜ., காங்கிரஸ் கட்சியினர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கமிஷனரிடம் மனு அளித்தனர். இக் கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி முன் பெண் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சுகாதரம் பற்றி கண்டு கொள்ளாமல் ஒப்பந்த நிறுவனம் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
மறுபுறம் ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்குவதில்லை. குறைந்த ஊதியத்தையும் உரிய நாட்களில் வழங்குவதில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என பணியாளர்கள் குமுறுகின்றனர்.
ரத்து செய்ய வேண்டும்
கிருஷ்ணபிரபா, அ.தி.மு.க., கவுன்சிலர்: நகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 28 பேர் வீதம் 140 பேர் பணி செய்ய வேண்டும். ஆனால் 10-12 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். நகராட்சியில் 1989ல் 24 வார்டுகள் இருந்த போது 280 பணியாளர்கள் பணிபுரிந்தனர். ஆனால் இன்று மக்கட்தொகை, வணிக வளாகங்களை கருத்தில் கொண்டு பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். சரிவர பணிகளை மேற்கொள்ளாத தனியார் நிறுவன ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.
பராமரிக்காத வாகனங்கள்
நாகராஜ், காங்.,கவுன்சிலர் (காங்.,): ஒப்பந்த நிறுவனம் நகராட்சி வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதே போல் அந்த வாகனங்களை ஏற்படும் பழுதுகளை நீக்க வேண்டும். ஆனால், இந்த நிறுவனம் வாகனங்களை சீரமைப்பதில்லை. இதனால் பல வாகனங்கள் துருபிடித்து வீணாகின்றன. ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையால், நிரந்தர பணியாளர்களை குப்பை அள்ள பயன்படுத்துகின்றனர். இதனால் சாக்கடை துார்வாருதல், கொசுமருந்து தெளித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிர்வாகம்
ஆனந்தி, பா.ஜ. கவுன்சிலர்:ஒப்பந்த நிறுவனத்தால் ஓராண்டாக நகரில் சுகாதாரம் பாதித்து ஊரே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. வீடுகளில் சரிவர குப்பை வாங்காததால் பலர் திறந்த வெளியில் கொட்டி செல்கின்றனர். முறையாக பணி செய்யாத ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையாளரிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை.
தவிர்ப்பு
இப்பிரச்னை குறித்து விளக்கம் கேட்க நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, கமிஷனர் ஏகராஜ் ஆகியோரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது எடுக்க வில்லை.
தீர்வு நகராட்சி நடவடிக்கை தேவை
நகரில் தற்போது நிலவும் சுகாதார சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்த நிறுவனம் உரிய பணியாளர்களுடன் விதிப்படி பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடன்படாவிட்டால் மாற்று ஏற்பாட்டை நகராட்சி உடனடியாக மேற்கொண்டு சுகாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.