/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊசிமலை கண்மாயில் நீர் தேங்காததால் நிலத்தடி நீர் மட்டம் குறைவு பாலக்கோம்பையில் விளைநிலங்கள் தரிசாகும் பரிதாபம்
/
ஊசிமலை கண்மாயில் நீர் தேங்காததால் நிலத்தடி நீர் மட்டம் குறைவு பாலக்கோம்பையில் விளைநிலங்கள் தரிசாகும் பரிதாபம்
ஊசிமலை கண்மாயில் நீர் தேங்காததால் நிலத்தடி நீர் மட்டம் குறைவு பாலக்கோம்பையில் விளைநிலங்கள் தரிசாகும் பரிதாபம்
ஊசிமலை கண்மாயில் நீர் தேங்காததால் நிலத்தடி நீர் மட்டம் குறைவு பாலக்கோம்பையில் விளைநிலங்கள் தரிசாகும் பரிதாபம்
ADDED : பிப் 13, 2025 05:47 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், பாலக்கோம்பை ஊசி மலை கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் நிலத்தடி நீர் குறைந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. வாழ்வாதாரம் பாதித்த விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்லும் நிலை தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது பாலக்கோம்பை கிராமம். இப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் ஊசிமலை கண்மாய் அமைக்கப்பட்டது. கண்மாயிலிருந்து மடைகள், பாசனக் கால்வாய் அமைத்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் இருந்தது. கண்மாயில் தேங்கிய நீரால் நிலத்தடி நீரை மேம்படுத்தி இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் நீர்வரத்தின்றி வறண்டுள்ளது. கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை
வெள்ளைச்சாமி, பாலக்கோம்பை: பாலக்கோம்பை ஊசிமலை கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள ஆனைக்கல் மலை, ஓவன் பாறை, ஊசிமலை பகுதிகளில் இருந்து மழைக்காலத்தில் நீர் கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் நீர் வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை. இதனால் கண்மாயில் நீர் தேங்கவில்லை. மலையை ஒட்டி உள்ள தமச்சால் ஓடை வழியாக செல்லும் நீர் கண்மாய்க்கு வராமல் வீணாகிறது. இந்த நீரை கண்மாய்க்கு வரும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் நீர் தேங்கினால் எழுமலை மணியப்பாறை, கோம்பை, ஈஸ்வரன் கோயில் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலத்தடி நீர் மேம்படும்.
மாற்று தொழில் தேடி வெளியூர் செல்லும் நிலை
குருசாமி, பாலக்கோம்பை: இப்பகுதியில் வளமான மண் இருந்தும் நீர் ஆதாரம் குறைவதால் விவசாயம் பாதித்து, அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழிலும் நசிவடைகிறது. விவசாயம் பாதிப்பதால் இளைய தலைமுறை இதில் அக்கறை கொள்வதில்லை. விவசாய கூலி தொழிலாளர்கள் பலரும் மாற்றுத் தொழிலுக்காக வெளியூர் செல்கின்றனர். தொழில் வளம் இல்லாத இப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியாறு உபரிநீர் திட்டம் அவசியம்
துரை காளிராஜ், பாலக்கோம்பை: கடந்த காலங்களில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து நாகலாறு ஓடை வழியாக ஜம்புலிப்புத்தூர் கண்மாய் வரை நீர் சென்றுள்ளது. பல ஆண்டுகளில் இப்பகுதியில் காளவாசல்கள் அதிகரித்ததால் இயற்கை வளம் குறைந்து மழையும் குறைந்து விட்டது. பெரியாறு அணை உபரி நிறை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் வழியாக கொண்டு வந்து ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் தேக்குவதற்கு விவசாயிகள் போராடுகின்றனர். கடந்த முறை தேர்தல் வாக்குறுதியாக்கி அரசியல் கட்சியினர் பிரச்சாரமும் செய்தனர். நடவடிக்கை தான் இல்லை. நசிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க இப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து கண்மாயில் நீர் தேக்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.