ADDED : செப் 14, 2025 03:58 AM

-- பெரியகுளம்:பெரியகுளம் காடுபட்டி பகுதியில் பசுங்கன்றுவை சிறுத்தை அடித்து கொன்றது. விளை நிலங்களில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரியகுளம் கீழ வடகரை உட்பட்ட காடுபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, கரும்பு, வாழை விவசாயம் செய்கின்றனர். விவசாயிகள் தோட்டங்களில் ஆடு, மாடுகள் வளர்க்கின்றனர். சில வாரங்களாக இப் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் ஜெயப்பிரகாஷ் தென்னந்தோப்பில் வேலை செய்து வரும் ராஜா என்பவர் வளர்த்து வரும் ஒரு பசுங்கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்று புதருக்குள் இழுத்துச் சென்றது. நேற்று அவர் வளர்த்து வரும் மற்றொரு கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து இழுத்து செல்ல தயாரானது.இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சத்தமிடவே சிறுத்தை புதருக்குள் ஓடியது.
ரேஞ்சர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர் புதருக்குள் காயங்களுடன் கிடந்த பசுங்கன்றுக்குட்டியை மீட்டு சிறுத்தை நகக்கீறல்களை பதிவு செய்தனர். கால்நடை துறையினர் கன்றுக்கு சிகிச்சை அளித்தனர். விரைவில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.