/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநோயாளிகள் பிரிவை இடம் மாற்ற வேண்டும்
/
வெளிநோயாளிகள் பிரிவை இடம் மாற்ற வேண்டும்
ADDED : மே 06, 2025 06:41 AM
சின்னமனுார்: சின்னமனுார் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை இடமாற்றம் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்மருத்துவமனைக்கு சேவை பிரிவுகள் அதிகளவில் இயங்குகின்றன. ஆனால் பணியில் குறைவான எண்ணிக்கையில் டாக்டர்கள், அனுமதிக்கப்பட்ட படுக்கைகள் எண்ணிக்கை குறைவு, இதர வசதிகள் என எதுவும் இல்லாத நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உள், வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு என வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் தினமும் காய்ச்சல், சளி, இருமல் என சிறு நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை பெற வரும் பொது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் கிழக்கு பக்கம் உள்ள கட்டடத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பார்மசி என பல பிரிவுகளை வைத்துள்ளனர். கருங்கட்டான்குளம், நடுத்தெரு, வ.உ.சி. தெரு என நகரின் தெற்குப் பகுதியில் இருந்து வருபவர்கள் ஏற்கெனவே குறைந்தது 2 கி.மீ., துாரம் நடந்து வர வேண்டி உள்ளது. மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் பயனற்ற நிலையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு, ஐ.சி.டி.சி., ஆலோசனை பிரிவு கட்டடங்களில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்கள், நடக்க முடியாதவர்களின் நிலைமை மிக அவதியாக உள்ளது.
மருத்துவ அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது: சரியான ஆலோசனை தான். நான் இணை இயக்குநர் டாக்டர்களின் ஆலோசனைகளை கேட்டு, வெளிநோயாளிகள் பிரிவை முன்பக்கம் கொண்டு வர முயற்சி செய்கிறேன் என்றார்.