/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி குப்பையை குளத்தில் கொட்டி தீ வைக்கும் அவலம் செட்டிகுளம் ஆக்கிரமிப்பால் சுருங்குவதால் விவசாயம் குறைகிறது
/
ஊராட்சி குப்பையை குளத்தில் கொட்டி தீ வைக்கும் அவலம் செட்டிகுளம் ஆக்கிரமிப்பால் சுருங்குவதால் விவசாயம் குறைகிறது
ஊராட்சி குப்பையை குளத்தில் கொட்டி தீ வைக்கும் அவலம் செட்டிகுளம் ஆக்கிரமிப்பால் சுருங்குவதால் விவசாயம் குறைகிறது
ஊராட்சி குப்பையை குளத்தில் கொட்டி தீ வைக்கும் அவலம் செட்டிகுளம் ஆக்கிரமிப்பால் சுருங்குவதால் விவசாயம் குறைகிறது
ADDED : ஏப் 03, 2025 04:59 AM

பெரியகுளம்: பெரியகுளம் அழகர்சாமிபுரத்தில் உள்ள செட்டிகுளத்தில் கீழ வடகரை ஊராட்சி நிர்வாகம் குப்பையை டிராக்டரில் ஏற்றி சென்று கொட்டி தீ வைத்து மாசுபடுத்துகின்றனர்.
பெரியகுளம் கீழ வடகரைஅழகர்சாமிபுரத்தில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவில் செட்டிகுளம் உள்ளது.
இக் குளத்திற்கு கொடைக்கானல் மலை அடிவாரப்பகுதியில் நீர் உற்பத்தியாகி சின்னூர் ஆறு, பேக்கோம்பை ஆறு, குப்பாம்பாறை ஆறுகளில் சங்கமித்து பெரியாறாக மாறி கல்லாற்றில் கலக்கிறது. அங்கிருந்து வரும் நீரும், நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் செட்டிகுளத்திற்கு தண்ணீர் வருகிறது. இக்கண்மாய் நீரை நம்பி மா, தென்னை, நெல், வாழை, கரும்பு சாகுபடி 500 ஏக்கர் நேரடியாகவும், பல நூறு ஏக்கர் மறைமுகமாகவும் பயன் பெற்றனர்.
தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் குளம் சிக்கி படிப்படியாக அதன் பரப்பளவு குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் கண்மாய் காலப்போக்கில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.
கண்துடைப்பாக அளவீடு பணி: கடந்தாண்டு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, விவசாயிகள் கண்மாய் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்று கூடினர்.
இதனை அறிந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை 'வரிந்துகட்டி' வந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு அளவீடு பணி நடத்தினர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அச்சமடைந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் மீண்டும் ஆக்கிரமிப்பு பகுதியை உள்குத்தகை விட்டனர்.
கண்மாயை காப்பாற்றுங்கள்
நாகராஜ், மேலப்புரவு விவசாயி, பெரியகுளம்: செட்டிகுளம் கீழ வடகரை ஊராட்சியின் நீர் ஆதாரம் மட்டுமின்றி மாடு, ஆடுகளுக்கு தாகம் தணிக்கும் குளமாக உள்ளது. கீழ வடகரை ஊராட்சியில் குப்பை சேகரித்து முறையாக மறுசுழற்சி செய்யாமல் டிராக்டரில் ஏற்றி சென்று குளத்தில் கொட்டி தீ வைத்து மாசுபடுத்துகின்றனர். குப்பைகளுக்கு தினமும் தீ வைப்பதால் அந்தப்பகுதி முழுவதும் மாசுபட்டுள்ளது. கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து மா, வாழை, இலவம், கரும்பு உள்ளிட்டவைகளை விவசாயம் செய்கின்றனர்.
இதனால் கண்மாய் நீரினை நம்பி விவசாயிகளின் வாழ்வாதாரம் 'பாழாகி' வருகிறது. ஆக்கிரமிப்பால் குளம் ஓடையாக மாறி வருகிறது.
விவசாயம் குறைவு
பாண்டி,விவசாயி,பெரியகுளம்: குளத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பினால் விவசாயத்தின் மீது நம்பிக்கை குறைகிறது. குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும்.
ஆக்கிரமிப்பால் தற்போது நெல் விவசாயம் முழுவதுமாக குறைந்தது. நீர்வளத்துறை முதல் கட்டமாக கண்மாயின் பரப்பளவு குறித்து போர்டு வைக்க வேண்டும்.

