/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
3 ஆண்டுகளாகியும் முடியாத மின்மயான பணி; ஆண்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் திட்டம் நிறைவு பெறாத அவலம்
/
3 ஆண்டுகளாகியும் முடியாத மின்மயான பணி; ஆண்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் திட்டம் நிறைவு பெறாத அவலம்
3 ஆண்டுகளாகியும் முடியாத மின்மயான பணி; ஆண்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் திட்டம் நிறைவு பெறாத அவலம்
3 ஆண்டுகளாகியும் முடியாத மின்மயான பணி; ஆண்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் திட்டம் நிறைவு பெறாத அவலம்
ADDED : ஏப் 06, 2025 08:08 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சியில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான மின்மயான பணி துவங்கி மூன்று ஆண்டுகளாகியும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் இறந்த உடல்களை எரியூட்ட கூடுதல் செலவு, சிரமம் ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள், சுற்றியுள்ள ஊராட்சிகளில் இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதற்கு ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் மின் மயானம் துவக்க பல்வேறு சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அடிப்படை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. அரசு அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் ஓராண்டில் முழுமை பெற வேண்டிய பணி இன்னும் மூன்று ஆண்டுகளாக நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களை விறகு மூலம் எரியூட்ட கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது.
தேனி அரசு மருத்துவமனை, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உடலையும் எரிப்பதற்கு வெளியூர் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். 20 கி.மீ., தூரம் உள்ள தேனி மின் மயானத்திற்கு கொண்டு செல்ல வாகன செலவு அதிகமாகிறது.
பயன்பாட்டிற்கு வராத மின் மயானம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக முடியாத பணி
பாலமுருகன், கவுன்சிலர், ஆண்டிபட்டி பேரூராட்சி : மின் மயான பணிகள் முழு அளவில் முடிந்துள்ளதா என்று தெரியவில்லை. புகை போக்கி குழாய்கள் இன்னும் முழுமையாக அமைக்கவில்லை. ஆம்புலன்ஸ் செல்வதற்கான ரோடு வசதி இல்லை. மின் மயான பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரும் இல்லை. மாவட்ட அதிகாரிகளும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. மூன்றாண்டுகளாக முடியாத பணி குறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்கவில்லை. விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசின் நடவடிக்கை தேவை.
இறந்தவர்கள் உடலை எரிக்க கூடுதல் செலவு
இமயம்ஆனந்த், பாப்பம்மாள்புரம்: ஆண்டிபட்டி சுடுகாடு பாப்பம்மாள்புரத்தை அடுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை கிடங்கை ஒட்டி உள்ளது. இரவில் பாதுகாப்பில்லாத இப்பகுதியில் மின் மயானம் பயன்பாட்டிற்கு வர வேண்டும். தற்போது சுடுகாடு செல்வதற்கு ரோடு, தெருவிளக்கு வசதிகள் இல்லை. இரவில் இருள் மூழ்கியுள்ளது. சமூக விரோதிகள் நடமாட்டம் சுடுகாடு பகுதியில் அதிகம் உள்ளது.
தற்போது இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கான எரிபொருள், அதற்கான ஆட்களை ஒன்று சேர்ப்பதில் மிகுந்த சிரமமும் கூடுதல் செலவும் ஆகிறது. இறந்தவர்களின் உடல் ஆண்டிபட்டி சுடுகாட்டில் எரியூட்டப்படுகிறது. மின் மயான பயன்பாட்டிற்கு வந்தால் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பல கிராமங்களும் பயன் கிடைக்கும்.
விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
வினிதா, செயல் அலுவலர், ஆண்டிபட்டி பேரூராட்சி: மின் மயான பணிகள் முழுமை பெற்றுள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாக அனுமதிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பயன்பாட்டிற்கு வரவேண்டும்
தீர்வு: மாவட்ட அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து மின் மயான பணிகள் முடிந்துள்ளதா மின் மயானம் அமைந்திருக்கும் இடத்திற்கு தேவையான கூடுதல் வசதிகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.