/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி இடிந்து விழும் அபாயம்; பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு பொதுமக்கள் அச்சம்
/
சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி இடிந்து விழும் அபாயம்; பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு பொதுமக்கள் அச்சம்
சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி இடிந்து விழும் அபாயம்; பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு பொதுமக்கள் அச்சம்
சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி இடிந்து விழும் அபாயம்; பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு பொதுமக்கள் அச்சம்
ADDED : டிச 21, 2024 08:12 AM

பெரியகுளம் : பெரியகுளம் செயின் சேவியர் தெருவில் பயன்பாடின்றி சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சி 13 வது வார்டு செயின்ட் சேவியர் தெரு, அம்பேத்கர் நகர், வைகைஅணை ரோடு ஆகிய பகுதிகள் உள்ளடக்கியுள்ளது. இப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தீயணைப்பு நிலைய குடியிருப்பு பின்புறம் பூங்காவிற்கு எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கடி தொந்தரவு அதிகம் உள்ளதால் கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப்பகுதியில் இரவில் மக்கள் தூங்குவதற்கு சிரமப்படுகின்றனர். கடந்தாண்டு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்பேத்கர் நகர் பூங்காவில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் உடற்பயிற்சி கூடத்திற்கு அளவீடு செய்தும் இன்னும் பணி துவங்கவில்லை. பூங்காவில் இரவில் சமூக விரோதிகள் மதுபாராக பயன்படுத்துகின்றனர். அம்பேத்கர் நகர் பகுதியில் சாக்கடை அகலப்படுத்தப்படாமல், சுத்தம் செய்யாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெருவை ஒட்டியுள்ள நகராட்சி அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள 22 வீடுகளில் தற்போது முன் பகுதியில் உள்ள 7 வீடுகளில் மட்டும் அலுவலர்கள் வசிக்கின்றனர். 15 வீடுகள் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சேதமடைந்த வீடுகள் குப்பை மேடாகி உள்ளது.
பயன் இல்லாதமேல்நிலைத் தொட்டி
தனலட்சுமி, செயின்ட் சேவியர் தெரு, பெரியகுளம்: பத்து ஆண்டுகளுக்கு முன் செயின்ட் சேவியர் தெருவில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி மூலம் இப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அதன்பின் குடிநீர் விரிவாக்க திட்டத்தின் மூலம் நேரடியாக குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளாக மேல்நிலைத் தொட்டி பயன் இன்றி உள்ளது. இதன் அடிப்பகுதி, மேற்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலை தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இத் தொட்டியை அகற்ற மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இது வரை நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. தெருவை ஒட்டியுள்ள நகராட்சி அலுவலர்கள் குடியிருப்புகளில் தற்போது பராமரிப்பு இன்றி குப்பை கொட்டுகின்றனர். இதனால் தெருவில் துர்நாற்றம் வீசுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.
விளையாட்டு உபகரணங்கள் சேதம்
முத்து கிருஷ்ணன், அம்பேத்கர் நகர், பெரியகுளம்:
அம்பேத்கர் நகர் பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. பூங்காவில் இருந்த 'ஸ்பிரிங்' பொம்மை, ராட்டினம் உடைந்து மூலையில் கிடக்கிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பூங்காவில் வலது புறம் காலி இடத்தில் கபடி விளையாட 'மேட்' அமைத்து தர வேண்டும். இளைஞர்கள் பலர் போலீஸ், ராணுவம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு செல்ல இங்கு உடற்பயிற்சி கூடம், பார் கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.
வடிகால் வசதியின்றி தேங்கும் கழிவுநீர்
விக்னேஷ் குமார், அம்பேத்கர் நகர், பெரியகுளம்:
தெருவில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் நடந்து செல்லும் போது கற்களில் இடறி மக்கள் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால், சாக்கடையுடன் மழை நீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பூங்காவில் பாதுகாப்பிற்கு வாட்ச்மேன் நியமிக்க வேண்டும்.