/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை சேதமடைந்து மழைநீருடன் கழிவுநீர் தெருவில் ஓடும் அவலம் ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு பொதுமக்கள் குமுறல்
/
சாக்கடை சேதமடைந்து மழைநீருடன் கழிவுநீர் தெருவில் ஓடும் அவலம் ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு பொதுமக்கள் குமுறல்
சாக்கடை சேதமடைந்து மழைநீருடன் கழிவுநீர் தெருவில் ஓடும் அவலம் ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு பொதுமக்கள் குமுறல்
சாக்கடை சேதமடைந்து மழைநீருடன் கழிவுநீர் தெருவில் ஓடும் அவலம் ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு பொதுமக்கள் குமுறல்
ADDED : டிச 07, 2024 08:24 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டில் சாக்கடை சேதமடைந்துள்ளதால் மழைநீருடன் கழிவு நீர் தெருக்களில் ஓடும் அவலம் தொடர்கிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
இப் பேரூராட்சி பாப்பம்மாள்புரத்திற்குட்பட்ட 3வது வார்டில் டி.வி.ரெங்கநாதபுரம் ரோடு, 6 பெரிய தெருக்கள், 30 க்கும் மேற்பட்ட சிறியதெருக்கள், குறுக்குச் சந்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வடிகால் சேதமடைந்துள்ளது. இதனால் மழை பெய்தால் மழை நீருடன் கழிவு நீர் வெளியேறி தெருக்களில் ஓடுகிறது. 3வது வார்டு வழியாகச் செல்லும் கழிவுநீர் ஓடை, பயன்பாடு இல்லாத பிளாட்டுகளில் கழிவுநீர் தேங்குகிறது.
இதில் வளர்ந்துள்ள புதர்களால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பேரூராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர் மூலம் நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வார்டில் நிலவும் பிரச்சனை குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சேதமடைந்த ரோட்டால் சிரமம்
ஆனந்தன், ஆண்டிபட்டி: வைகை அணை ரோட்டில் இருந்து 3வது வார்டு பாப்பம்மாள்புரம் வரை அரை கி.மீ., தூரம் ரோடு சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது.
இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் பாதிப்படைகின்றனர். இப்பகுதி காந்திநகரில் உள்ளவர்களுக்கு ஓட்டு உரிமை பேரூராட்சியில் உள்ளது. ஆனால் டி. ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு வரி செலுத்துகின்றனர். கிராம ஊராட்சி மூலம் வளர்ச்சிப் பணிகளுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. வார்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் கதவு எண், தெருக்கள் பெயர் இல்லாததால் முகவரியில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
குப்பை அற்றும் பணி மேற்கொள்வது பேரூராட்சியா, ஊராட்சியா
வி.கனகராஜ் : டி.வி.ரங்கநாதபுரம் செல்லும் ரோட்டில் காந்திநகர் எதிரே கழிவு நீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டி அப்படியே விட்டுள்ளனர். பணிதுவக்காமல் பல மாதமாக இழுத்தடிக்கின்றனர். குழந்தைகள், முதியோர்கள் பள்ளத்தால் பாதிப்படைகின்றனர். இதே பகுதியில் குவிந்து வரும் குப்பை சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ரோட்டில் ஒருபுறம் ஊராட்சியில் எல்லையாகவும் மறுபுறம் பேரூராட்சி எல்லையாகவும் இருப்பதால் குப்பையை யார் அள்ளுவது என்று தெரியாமல் குவிந்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.
இரவில் பணிகள் முடித்து வருபவர்கள் பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது. வார்டில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷ பூச்சிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
பாலமுருகன், கவுன்சிலர்: வார்டில் உள்ள முத்து நகரில் தெருக்கள் மேடு பள்ளங்களாக மோசமான நிலையில் உள்ளது. தெருக்களில் புதிய வடிகாலுடன் சிமென்ட் ரோடு தேவை. பல மாதங்களாக போராடியும் நிதி பெற முடியவில்லை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.9 லட்சம் நிதியில் வடிகால் பணிகளை துவக்கி தொடர்ந்து பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். வார்டுகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சிப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.