/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் மந்தகதியில் நடக்கும் தரைப்பாலம் சீரமைப்பால் அவதி
/
தேனியில் மந்தகதியில் நடக்கும் தரைப்பாலம் சீரமைப்பால் அவதி
தேனியில் மந்தகதியில் நடக்கும் தரைப்பாலம் சீரமைப்பால் அவதி
தேனியில் மந்தகதியில் நடக்கும் தரைப்பாலம் சீரமைப்பால் அவதி
ADDED : ஏப் 11, 2025 05:13 AM

தேனி: தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் ராஜவாய்க்கால் தரைப்பாலம் சீரமைக்கும் பணியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் பணிகள் தாமதம் ஆகிறது. குறுகிய ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
தேனி நகர்பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் துார்வாரும் பணி இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இந்த வாய்க்காலில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் இருந்த தரைப்பாலத்தை சீரமைக்க அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது. பாலத்தை சீரமைக்கும் பணியை ஜன.,2ல் அவசர கதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கினர்.
பாலத்தை இரு பகுதியாக பிரித்து பணிகள் நடந்தது. ஒரு பகுதியில் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்த பின் மற்றொரு பகுதியில் சீரமைக்கும் பணியை பிப்.,19ல் துவங்கினர். பணி நடைபெறும் பகுதியில் ரோட்டின் அகலம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் சீரமைப்பு பணி நடந்து வரும் அதே காலகட்டத்தில் தேனி நகராட்சி சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்காலில் ரூ.2.26 கோடி செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை துவங்கினர். ஒதுக்கீடு செய்த நிதியினை மார்ச் இறுதிக்குள் பணியை துவக்க வேண்டும் என்ற நிர்பந்ததில் அவசர, அவசரமாக பணியை துவங்கினர். ஒரே நேரத்தில் இரு பகுதியிலும் பணி நடந்து வருவதால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இப் பகுதியில் ஆக்கிரமிப்புகள், ஆட்டோக்களால் இடையூறு அதிகரித்தாலும் கண்துடைப்பிற்காக மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உடைந்த பாதாள சாக்கடை குழாய்
இந்நிலையில் பாலம் பணி நடைபெறும் பகுதியில் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறியது. இதனால் 20 நாட்களாக பணி நிறுத்தப்பட்டது. பின் பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி நடந்தது. சில நாட்களாக பெய்து வரும் மழையால் வேலை நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
நேருசிலை சிக்னலில் இருந்து கம்பம் ரோட்டில் செல்லும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது தொடர்கிறது. மோதிக்கொள்ளும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாக்குவாதம், தகராறில் ஈடுபடுகின்றனர்.
அப்போது போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். கொச்சி -தனுஷ்கொடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் சீரமைப்பு பணியால் கடும் நெருக்கடி நிலவுகிறது. எனவே, தரைப்பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

