ADDED : ஜூலை 06, 2025 04:11 AM

மூணாறு: ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு மறு திசையான மாட்டுபட்டி பகுதிக்கு படையப்பா ஆண் காட்டு யானை சென்றது.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை தனக்கென தனி வழியில் நடமாடுவது வழக்கம். குறிப்பாக மூணாறில் இருந்து உடுமலைபேட்டை ரோட்டில் மறையூர் அருகே பாம்பன் மலை வரையும், அது போன்று மறு திசையில் மாட்டுபட்டி, அருவிக்காடு, குண்டளை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக உடுமலைபேட்டை ரோட்டில் நடமாடிய படையப்பா குண்டுமலை, தென்மலை ஆகிய எஸ்டேட் வழியாக நேற்று முன்தினம் மாட்டுபட்டி அணை பகுதிக்கு வந்தது. அணையில் நீந்தி மறு கரைக்கு வந்த படையப்பா, அங்கு 8ம் மைல் பகுதியில் உள்ள தேவிகுளம் ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ரோட்டில் நடமாடியது. அதனை அந்த வழியில் சென்ற சிலர் விரட்டினர். இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் படையப்பா ரோட்டில் சுதந்திரமாக நடமாடியது.