/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா
/
காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா
ADDED : ஆக 18, 2025 03:03 AM

மூணாறு : ஓணம் பண்டிகை விற்பனைக்காக சாகுபடி செய்த காய்கறிகளை படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மூணாறு அருகே குண்டுமலை, தென்மலை, செண்டுவாரை, எல்லப்பட்டி உட்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் உப வருமானத்திற்காக பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.
தற்போது செண்டுவாரை, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் ஓணம் பண்டிகை விற்பனைக்காக முட்டைகோஸ், காரட், பீன்ஸ் வகைகள் உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டன. அவை ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்நிலையில் செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் கடந்த 2 வாரங்களாக பிரபல படையப்பா ஆண் காட்டு யானை முகாமிட்டு காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. தோட்டங்களில் நன்கு தீவனம் கிடைப்பதால், அப்பகுதியில் நாள் கணக்கில் முகாமிட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் சேதமடைந்ததால் தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.
தவிர தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் படையப்பா நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.