/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் மடையை திடீரென திறந்ததால் தெருவில் புகுந்த வெள்ளம் பொறியாளர் அலட்சியத்தால் பண்ணைப்புரம் மக்கள் அவதி
/
18ம் கால்வாய் மடையை திடீரென திறந்ததால் தெருவில் புகுந்த வெள்ளம் பொறியாளர் அலட்சியத்தால் பண்ணைப்புரம் மக்கள் அவதி
18ம் கால்வாய் மடையை திடீரென திறந்ததால் தெருவில் புகுந்த வெள்ளம் பொறியாளர் அலட்சியத்தால் பண்ணைப்புரம் மக்கள் அவதி
18ம் கால்வாய் மடையை திடீரென திறந்ததால் தெருவில் புகுந்த வெள்ளம் பொறியாளர் அலட்சியத்தால் பண்ணைப்புரம் மக்கள் அவதி
ADDED : நவ 07, 2025 04:49 AM

உத்தமபாளையம்: 18 ம் கால்வாய் பொறியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி திடீரென மடையை திறந்ததால் பண்ணைப்புரம் விநாயகர் கோயில் தெருவில் வெள்ளம் புகுந்தது. தெரு வெள்ளக் காடாக மாறியதால் வீடுகளில் இருந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
பண்ணைப்புரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள கரியணம்பட்டியில் இருந்து பண்ணைப்புரம் செல்ல விநாயகர் கோயில் தெரு உள்ளது. மலையடிவாரத்தில் இருந்து வரும் மழைநீர் இந்த ஓடை வழியாக முன்பு சென்றுள்ளது. 18ம் கால்வாய் அமைத்த பின் மழை நீர் ஓடையில் வருவதில்லை. இதனால் விநாயகர் கோயில் தெரு ஒரு கி.மீ. தூரத்திற்கு இருபுறமும் வீடுகள்,நடுநிலைப் பள்ளி,அங்கன்வாடிகள் உள்ளன.
நேற்று காலை பண்ணைப்புரத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள 18 ம் கால்வாய் மடை திறக்கப்பட்டதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. விநாயகர் கோயில் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருபுறமும் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளில் வசித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். தெரு முழுவதும் வெள்ளக்காடானது. பெரியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, அங்கன்வாடிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவித்தனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது:
முன் அறிவிப்பு இன்றி திறந்த மடை சங்கர், விநாயர் கோயில் தெரு, பண்ணைப்புரம்: 18 ம் கால்வாய் மடையை முன் அறிவிப்பு இன்றி எதற்காக திறந்து ஊருக்குள் தண்ணீர் வர செய்தனர் என தெரியவில்லை. இது ஓடை என்றாலும் தற்போது மக்களுக்கு இது தான் பாதை. தண்ணீர் திறப்பதை முன் கூட்டியே அறிவித்து இருக்கலாம். தற்போது மடையில் தண்ணீர் திறக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கிய அதிகாரிகள் கிருபாகரன், பண்ணைப் புரம்: திடீரென தெருவில் வெள்ளம் வந்ததால் கேரளாவில் மழை பெய்து வெள்ளம் ஊருக்குள் வருகிறதோ என நினைத்தோம். ஆனால் 18 ம் கால்வாய் மடையை தேவையில்லாமல் திறந்து மக்ககளை அவதிப்பட வைத்துள்ளனர். ஒரு காலத்தில் மழைநீர் ஓடையாக இருந்திருக்கலாம். தற்போது பண்ணைப்புரத்தின் முக்கிய தெருவாகும். இரு ஊர்களை இணைக்கும் முக்கிய பாதையாகும். எனவே இந்த விநாயகர் கோயில் தெருவை மண் கொட்டி மேடாக உயர்த்தி சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். 18 ம் கால்வாயில் ஊருக்குள் தண்ணீர் வருவது போன்று அமைக்கப்பட்டுள்ள மடையை அகற்ற வேண்டும். இந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
மடையை மாற்ற முயற்சி பேரூராட்சி தலைவர் லெட்சுமி கூறுகையில், 'அந்த ஓடையை மெத்தி ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடுபெற முயற்சி மேற்கொள்ளப்படும். 18ம் கால்வாய் மடையை வேறு இடத்திற்கு மாற்றி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க பொறியாளர்களிடம் பேரூராட்சி சார்பில் வலியுறுத்தப்படும்,' என்றார். இது குறித்து 18 ம் கால்வாய் செயற்பொறியாளர் சரவணனை தொடர்பு கொண்ட போது பதிலளிக்கவில்லை.

