/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை துார்வாரும் திட்டம் செயல்படுத்துவது எப்போது: நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காமல் அலட்சியம்
/
வைகை அணை துார்வாரும் திட்டம் செயல்படுத்துவது எப்போது: நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காமல் அலட்சியம்
வைகை அணை துார்வாரும் திட்டம் செயல்படுத்துவது எப்போது: நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காமல் அலட்சியம்
வைகை அணை துார்வாரும் திட்டம் செயல்படுத்துவது எப்போது: நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காமல் அலட்சியம்
ADDED : நவ 07, 2025 04:48 AM

71 அடி உயரம் உள்ள வைகை அணை 1956ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்கு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. அணை பயன்பாட்டிற்கு வந்து 68 ஆண்டுகளை கடந்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை.
தற்போது அணையின் அடிப்பகுதியில் 15 அடிவரை வண்டல் படித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கன மழையால் கூடுதல் நீர் வரத்து கிடைத்தாலும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க முடியவில்லை. அணையில் 65 அடிக்கும் அதிகமாக நீர்மட்டம் இருந்தால் மட்டுமே பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்க முடியும். கீழ் பகுதியில் உள்ள ஏழு ஷட்டர்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் வழியாக தேவையான நேரங்களில் தண்ணீர் திறந்து பயன்படுத்தும் விதமாக ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் முழு அளவான 71 அடி வரை நீர் தேக்கப்படுவதில்லை. 70 அடியை கடந்ததும் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படும். இந்த ஆண்டு அக்.27 ல் அணை நீர்மட்டம் 70.24 அடி வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை நீர்மட்டம் 67.65 அடியாக உள்ளது. பருவ மழைக்கான காலம் என்பதால் எந்நேரமும் வைகை அணைக்கு கூடுதல் நீர் வரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வைகை அணையை தூர் வாருவதற்கு கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அணை தூர் வாரும் திட்டத்தில் அணையின் நீர் தேக்கத்தில் பல்வேறு இடங்களில் மண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு மூலம் ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தூர்வாரும் பணியில் டெண்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தூர் வாரும் பணியில் அள்ளப்படும் வண்டல் மண்ணை மாற்று இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் நீர்மட்டம் இன்னும் சில மாதங்கள் 50 அடிக்கும் கூடுதலாகவே நீடிக்கும். நீர்மட்டம் குறைந்த பின் மீண்டும் தூர் வாருவதற்கான பணிகள் துவங்கும் வாய்ப்புள்ளது என்றனர்.

