ADDED : ஆக 27, 2025 12:41 AM
மூணாறு; மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் காலனியில் மாட்டு கொட்டகைக்கு புலி வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
குண்டளை சான்டோஸ் பகுதியில் மலைவாழ் மக்கள், ஆதிதிராவிடர் ஆகிய காலனிகள் உள்ளன. அப்பகுதியினர் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை புலி நடமாட்டத்தை பார்த்தனர்.
சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனியில் இரு தினங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் புலியை பார்த்தனர். அதனால் ஏற்பட்ட அச்சம் மறையும் முன்பு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஆதிதிராவிடர் காலனிக்கு வந்த புலி ரகு என்பவரின் மாட்டு கொட்டகைக்குள் புகுந்தது. அதில் கட்டப்பட்டிருந்த மூன்று பசுக்கள் புலியை பார்த்ததும் பலமாக சப்தமிட்ட நிலையில் ஒரு பசு கொட்டகையை விட்டு வெளியில் தப்பி ஓடிவிட்டது.
பசுக்களின் சப்தம் கேட்டு ரகு கொட்டகைக்கு சென்றபோது புலி தப்பி ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புலியிடம் இருந்து பசுக்கள் உயிர் தப்பிய நிலையில் மக்கள் அச்சம் அடைந்தனர்.