/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனத்துறை அலட்சியத்தால் குப்பையாகும் காப்புக்காடு: தேனி நகராட்சி 20 வது வார்டு பொது மக்கள் குமுறல்
/
வனத்துறை அலட்சியத்தால் குப்பையாகும் காப்புக்காடு: தேனி நகராட்சி 20 வது வார்டு பொது மக்கள் குமுறல்
வனத்துறை அலட்சியத்தால் குப்பையாகும் காப்புக்காடு: தேனி நகராட்சி 20 வது வார்டு பொது மக்கள் குமுறல்
வனத்துறை அலட்சியத்தால் குப்பையாகும் காப்புக்காடு: தேனி நகராட்சி 20 வது வார்டு பொது மக்கள் குமுறல்
UPDATED : டிச 13, 2025 08:10 AM
ADDED : டிச 13, 2025 05:41 AM

தேனி: தேனியில் வனத்துறை கண்டு கொள்ளாததால் காப்புகாடுகள் குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. அங்கு சேர்ந்துள்ள குப்பையால் அருகில் வசிப்போர் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கப்படுவதாக தேனி நகராட்சி 20வது வார்டு பொதுமக்கள் புலம்புகின்றனர்.
தேனி நகராட்சி 20 வது வார்டில் கே.ஆர்.ஆர்.,நகர் முதல் தெரு முதல் 13 தெருக்கள், பாரதி தெரு, ஜீவானந்தம் தெரு, காமராஜர் தெரு உள்ளன.கே.ஆர்.ஆர்., நகர் 5 வது தெருவில் வனத்துறை காப்புக்காட்டையொட்டி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வனத்துறை தடுப்புச்சுவர்அமைக்காததால் காப்புக்காடுகள் குப்பை தொட்டியாக இப்பகுதி மக்கள் மாற்றியுள்ளனர்.
போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு இப்பகுதியில் இருந்ததால் வழக்குகளில் கைப்பற்றும் வாகனங்கள் காப்புக்காடுகளுக்குள் நிறுத்தப்பட்டன. தற்போது அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வழக்குகளில் சிக்கிய 9 வாகனங்களை விட்டு சென்றனர். இந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தியுள்ளதால் அவை துருப்பிடித்து, விஷப்பூச்சிகளில் கூடாரமாக மாறி உள்ளது. இப்பகுதியை சிலர் மதுஅருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். பல ஆயிரம் டன் குப்பை காப்புக்காடுகளில் கொட்டப்பட்டுள்ளதால் வனவளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நகராட்சி கழிப்பறை அமைத்து காப்புக்காடுகளை பயன்படுத்துவதை வனத்துறை தடுக்க வேண்டும். இப்பகுதி மக்கள் கூறியதாவது:
வீடுகளுக்குள் வரும் வண்டுகள் டாக்டர் சுஷித், கே.ஆர்.ஆர்., நகர், தேனி: காப்புக் காடுகளில் குப்பை கொட்டுவதால் சிறு சிறு பூச்சிகள், வண்டுகள், வீடுகளுக்குள் வருகின்றன. இதனை தவிர்க்க 3 நாட்களுக்குஒரு முறை நகராட்சி கொசு மருந்து தெளிக்க வேண்டும். வார்டில் தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் திரிகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும். கே.ஆர்.ஆர்., நகர் மேடான பகுதியில் உள்ளதால் குடிநீர் வினியோகத்தில் சிரமங்கள் உள்ளது. துாய்மைப் பணியாளர்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை குப்பை சேகரிக்கின்றனர். தினசரி குப்பை சேகரிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் ஊடூருவும் சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு சத்யபிரியா, கே.ஆர்.ஆர்., நகர், தேனி: இதற்கு முன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 4நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் முக்கால் மணி நேரம் மட்டுமே வழங்குகின்றனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைக்கு வாங்கிபயன்படுத்துகிறோம். தினமும் குடிநீர் வழங்க வேண்டும். காலை, மாலையில் சில இளைஞர்கள் டூவீலரில் அதிவேகமாக(ரேஸ் டிரைவிங்) இயக்குகின்றனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்வோர் பாதிக்கப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

