ADDED : அக் 06, 2025 04:03 AM
மூணாறு : இடுக்கி அணையில் லேசர் ஷோ, மூலமற்றம் நீர்மின் நிலையம் மினியேச்சர் மாதிரி ஆகிய திட்டங்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தலைமையில் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை (உயரம் 554 அடி) பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவில், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவில் கட்டப்பட்டு உள்ளன. அவற்றின் தண்ணீர் ஒன்றாக தேங்கும் என்பதால் அணை நிரம்பும் போது கடல் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். அணையின் நீரை கொண்டு மூலமற்றம் நீர் மின் நிலையத்தில் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள அணையில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக இடுக்கி அணையில் 'லேசர் ஷோ' திட்டம், மூலமற்றம் நீர் மின் நிலையம் மினியேச்சர் மாதிரி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. அவற்றை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தலைமையில் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். மூலமற்றம் பகுதியில் மினியேச்சர் மாதிரி திட்டத்திற்கு இரண்டு இடங்களிலும் இடுக்கி அணையில் லேசர் ஷோ திட்டம் தொடர்பாகவும் ஆய்வு நடந்தது.
அமைச்சர் கூறியதாவது: நீர்மின் நிலையம் மினியேச்சர் மாதிரி திட்டம் மூலம் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இடுக்கி அணையை பார்வையிட கூடுதலாக பயணிகள் அனுமதிக்கப்படுவர். குளமாவ் வடக்கு ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மின்வாரியத்தின் அணை பாதுகாப்பு பிரிவு அனுமதி அளித்துள்ளது., என்றார்.