/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 02, 2026 05:43 AM

ஆண்டிபட்டி: ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வைகை அணைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வைகை அணை மற்றும் பூங்காக்கள் உள்ளன. கொடைக்கானல், கேரளா வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை அழகை ரசித்து செல்வது வழக்கம். கிறிஸ்துமஸ் அதனைத் தொடர்ந்து புத்தாண்டு விடுமுறையில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. வைகை அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடியாக இருக்கும் போது 10 சதுர மைல் பரப்பில் நீர்த்தேக்கம் பரந்து விரிந்திருக்கும்.
தற்போது நீர்மட்டம் 52.40 அடியாக குறைந்துள்ளது. குறைவான பரப்பில் உள்ள நீர்த்தேக்கம், பராமரிப்பில்லாத பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. வைகை அணையில் தனியார் மூலம் இயக்கப்படும் பல வகை ராட்டினங்களில் ஏறி சிறுவர் முதல் பெரியவர் வரை பலரும் மகிழ்ந்தனர்.
வைகை அணையின் முகப்பு பகுதியில் வலது இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் நீரின் அழகை ரசித்தும் அலைபேசிகளில் படம் பிடித்தும் சென்றனர். வைகை அணைக்கு வார நாட்களில் சில நூறு சுற்றுலா பயணிகள் மட்டும் வந்து செல்வர். புத்தாண்டு விடுமுறையான நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

