/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரள அரசு பஸ்சில் சுற்றுலா சென்ற பயணிகள் 10 மணி நேரம் ரோட்டில் தவிப்பு
/
கேரள அரசு பஸ்சில் சுற்றுலா சென்ற பயணிகள் 10 மணி நேரம் ரோட்டில் தவிப்பு
கேரள அரசு பஸ்சில் சுற்றுலா சென்ற பயணிகள் 10 மணி நேரம் ரோட்டில் தவிப்பு
கேரள அரசு பஸ்சில் சுற்றுலா சென்ற பயணிகள் 10 மணி நேரம் ரோட்டில் தவிப்பு
ADDED : டிச 18, 2024 07:17 AM

மூணாறு: கேரள அரசு பஸ்சில் சுற்றுலா வந்த பயணிகள் நடு ரோட்டில் பத்து மணி நேரம் தவித்தனர்.
கேரளாவில் அரசு போக்குவரத்து கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பல்வேறு டிப்போக்களில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு ' பேக்கேஜ்' முறைபடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சாலகுடி டிப்போவைச் சேர்ந்த பஸ்சில் கொரட்டியைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 45 பேர் குழு மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் ஆனக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுக்கு காலை, மதிய உணவு, டீ, பலகாரம், பஸ் கட்டணம் ஆகியவற்றிற்கு என ரூ.47,500 வசூலிக்கப்பட்டது.
ஆனக்குளம் அருகே குவைத்சிட்டி பகுதியில் மதிய உணவுக்காக மதியம் 2:00 மணிக்கு பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பஸ்சை இயக்கியபோது பழுதடைந்தது. அது குறித்து மூணாறு டிப்போவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சென்ற ஊழியர்கள் பழுதை சரி செய்ய முயன்றும் இயலவில்லை.
மாற்று பஸ்க்கு வசதி இல்லாததால் பயணிகள் பத்து மணி நேரம் நடு ரோட்டில் தவித்தனர்.
இதனிடையே பசியில் வாடிய பயணிகளுக்கு, அப்பகுதியினர் வேக வைத்த கப்பை கொடுத்து உதவினர். அதிகாலை 12:00 மணிக்கு மாற்று பஸ் சென்றது. அதில் ஏறுவதற்கு முன்பு சுற்றுலாவில் ஏற்பட்ட குளறுபடியை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி ரூ.15 ஆயிரம் திரும்பி வழங்கப்பட்டதால் சுற்றுலாவை கைவிட்டு அதிகாலை சொந்த ஊர் திரும்பினர்.