/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பின்றி பொலிவு இழந்த வைகை அணை பூங்கா எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
பராமரிப்பின்றி பொலிவு இழந்த வைகை அணை பூங்கா எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பராமரிப்பின்றி பொலிவு இழந்த வைகை அணை பூங்கா எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பராமரிப்பின்றி பொலிவு இழந்த வைகை அணை பூங்கா எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஆக 10, 2025 03:24 AM

ஆண்டிபட்டி: வைகை அணை பூங்கா பராமரிப்புக்கு போதுமான பணியாளர்கள் இல்லாததால் நாளுக்கு நாள் பொலிவு இழந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கிறது.
வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணையும் பார்த்து செல்கின்றனர்.
பரந்து விரிந்த பத்து சதுர மைல் பரப்புள்ள நீர்த்தேக்கம், வலது, இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள், உல்லாச ரயில், தனியார் மூலம் இயக்கப்படும் ராட்டினம் ஆகியவை ஒரு நாள் பொழுதுபோக்கும் அம்சங்களாக உள்ளன.
1959ல் துவக்கப்பட்ட வைகை அணை பூங்காவில் பராமரிப்புக்காக பிட்டர், பிளம்பர், கொத்தனார், சமையலர், வாகனம் இயக்க டிரைவர், பூங்கா பராமரிப்பாளர், எலக்ட்ரீசியன் உட்பட பல்வேறு பணிகளுக்கும் நிரந்தர, தற்காலிக அடிப்படையில் 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.
பணி ஓய்வுக்கு பின் அந்தந்த இடங்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணியாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது. தற்போது உதவி செயற்பொறியாளர் 1, உதவி பொறியாளர்கள் 3, மேற்பார்வையாளர் 1, உதவியாளர் 1 உட்பட 21 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தினக்கூலி அடிப்படையில் 84 பேர் உள்ளனர்.
இவர்கள் மூலமாகவும் பூங்காவில் அனைத்து பராமரிப்பு இன்றி பொலிவு இழந்து வருகிறது.
வெறுக்கும் பயணிகள் கண்ணுக்கு எட்டிய துாரம் கடல் போல் காட்சியளிக்கும் வைகை நீர் தேக்கத்தின் மறுபக்கம் பூங்காக்கள் பொழிவு இழந்து, குப்பை மேடாவும், சிலைகள் சிதிலமடைந்தும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும், பூங்காவில் ஓய்வெடுத்து உட்கார கூட உருப்படியான இருக்கைகள் இல்லை. பயணிகள் தங்கும் தனி விடுதிகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து இடிந்து விழுந்து தற்போது பாம்புகள் புகழிடமாக மாறியுள்ளது.
பொழுதை இனிமையாக கழிக்கலாம் என வைகை அணைக்கு செல்வோர் பொழுது போக்கு அம்சம் எதுவும் சிறப்பாக இன்றி ஏன் வந்தோம் என வேதனைப்படும் அளவிற்கு நிலை உள்ளது. பூங்காவின் தற்போதைய நிலை குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:
இருளில் முழ்கிய அணை திவாகர், மல்லிங்காபுரம், தேவாரம் : வைகை அணை பூங்காவை பசுமையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பூங்காவிற்கு வருபவர்களை கண்காணிக்கவும், வழிகாட்டவும் ஆட்கள் இல்லை. இதனால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
மாலை 6:00 மணிக்கு மேல் வைகை அணையின் அழகை மின்னொளியில் ரசிப்பதற்காகவே கடந்த காலங்களில் கூட்டம் அலைமோதும். தற்போது வைகை அணை இருளில் மூழ்கி கிடக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. பூங்காக்களில் உடைந்த சிலைகள், காய்ந்த புல்வெளிகளை ரசிக்க முடியவில்லை. தேனி மாவட்டத்தில் வைகை அணை பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் பராமரிப்பின்றி பொலிவு இழந்துவிட்டது.
பராமரிப்பு இல்லாததால் ஏமாற்றம் செல்வகுமார், தங்கம்மாள்புரம், கடமலைக்குண்டு: தேனி மாவட்டத்தில் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் கட்டணத்தில் இது போன்ற பூங்கா எங்கும் இல்லை. ஆழியாறு அணையில் நுழைவு கட்டணம் ரூ.60 ஆக உள்ளது. இங்குள்ள பூங்காக்கள் போன்று ஆழியாறு அணையில் இல்லை. வைகை பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத வைகை அணை பூங்கா ஏமாற்றமே தருகிறது. நுழைவு கட்டணத்தை உயர்த்தலாம். கடந்த காலத்தில் இருந்த வைகை அணை பூங்காவின் அழகை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
ரூ.5 கோடியில் மதிப்பீடு தயார் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வைகை அணை பூங்காவிற்கு அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதி மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா மேம்பாடு திட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் வைகை அணை பூங்காவை மேம்படுத்த திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வைகை அணையில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒரே பூங்காவில்வைத்து பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அந்த பூங்காவில் பணி முடிந்ததும் அடுத்த பூங்காவை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பூங்காக்களில் நீர் செல்லும் கேஸ்கட் பாதை, மின் உபகரணங்களை பராமரிக்க நிதி ஆதாரம், பணியாளர்கள் இல்லை. கடந்த 30 ஆண்டுக்கு முன்பு இருந்த வைகை அணையின் அழகை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றனர்.