UPDATED : ஜூலை 08, 2026 05:38 PM
ADDED : ஜூலை 08, 2026 05:20 PM
ஆண்டிபட்டி:அடுத்த வாரம் ஆடிப்பண்டிகை துவங்க உள்ளதால் பண்டிகைக்கு தேவைப்படும் வெள்ளாடுகளை தேடி வியாபாரிகள் கிராமங்களில் வலம் வருகின்றனர்.
ஹிந்துக்கள் ஆடியை முக்கிய பண்டிகை மாதமாக கொண்டாடுகின்றனர். புதுமண தம்பதிகள், உறவினர்களை அழைத்து அசைவ உணவு விருந்து அளிப்பதை பலரும் கவுரவமாக கொண்டுள்ளனர். முதல் ஆடி, நடு ஆடி, ஆடிப்பெருக்கு, கடைசி ஆடி என்று ஆடி மாதம் முழுவதும் அசைவ உணவுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
வழக்கமான மாதங்களை விட ஆடி மாதத்தில் வெள்ளாடுகளுக்கான தேவை அதிகம் இருக்கும். ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் வெள்ளாடுகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. ஆடிப்பண்டிகையை கணக்கில் கொண்டு பலரும் வெள்ளாடுகளை விற்பனை செய்து விடுவர். கடந்த சில மாதங்களாக ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் ஆடு வளர்ப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆண்டிபட்டி பகுதியில் வெள்ளாடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆடு வளர்ப்புவர்களிடம் ஆடுகள் பெறுவதற்கு முன் பணம் கொடுத்து வருகின்றனர்.
