/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மல்லப்புரம்--மயிலாடும்பாறை ரோட்டில் போக்குவரத்துக்கு நடவடிக்கை தேவை வனப்பகுதியில் ரோடு சீரமைத்தால் இரு மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்
/
மல்லப்புரம்--மயிலாடும்பாறை ரோட்டில் போக்குவரத்துக்கு நடவடிக்கை தேவை வனப்பகுதியில் ரோடு சீரமைத்தால் இரு மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்
மல்லப்புரம்--மயிலாடும்பாறை ரோட்டில் போக்குவரத்துக்கு நடவடிக்கை தேவை வனப்பகுதியில் ரோடு சீரமைத்தால் இரு மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்
மல்லப்புரம்--மயிலாடும்பாறை ரோட்டில் போக்குவரத்துக்கு நடவடிக்கை தேவை வனப்பகுதியில் ரோடு சீரமைத்தால் இரு மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்
ADDED : செப் 14, 2025 03:56 AM

கடமலைக்குண்டு:மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் -- மயிலாடும்பாறை மலைரோட்டை சீரமைத்து பஸ் போக்குவரத்து துவக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
க.மயிலாடும்பாறை ஒன்றியம் தாழையூத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரத்தை இணைக்க மலைப்பகுதி வழியாக ரோடு வசதி உள்ளது. 25 ஆண்டுக்கு முன்பு தாழையூத்து - மல்லப்புரம் ரோடு அமைக்கப்பட்டது. மயிலாடும்பாறை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், எழுமலை, ராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கு பிரதான ரோடுகள் வழியாக செல்வதை விட மலைப்பகுதி ரோட்டை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர். காலை, மாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகரித்தது. பொதுமக்கள் நலன் கருத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து மல்லப்புரம் இடையே மினி பஸ் சேவையும் துவக்கப்பட்டது. மலை வழியாக அமைக்கப்பட்ட ரோடு 20 ஆண்டுகளாக பராமரிப்பு மேற்கொள்ளவில்லை. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரோட்டின் அளவு குறுகியது. கனமழையால் ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. பஸ் சேவை துவக்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. தற்போது சேதமடைந்துள்ள ரோட்டின் வழியாக சிறிய ரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார்கள் சென்று திரும்புகிறது.இந்த ரோட்டின் அவசியம் குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
போக்குவரத்திற்கு லாயக்கற்ற ரோடானது ரதீஷ்குமார், மூலக்கடை: மயிலாடும்பாறையில் இருந்து மல்லப்புரம் வழியாக மலைப்பாதையில் சென்றால் 80 கி.மீ.,தூரத்தில் மதுரை சென்றுவிடலாம். சுற்றி சென்றால் 150 கி.மீ.,தூரம் செல்ல வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ரோடு பராமரிப்பு இல்லாத போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. வளைவில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் விலகிச் செல்வது சிரமமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர்கள் இல்லை. லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லும்போது சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.
நேரம் எரிபொருள் மிச்சம் பாஸ்கரன், மூலக்கடை: மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி ஊர்களில் இருந்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய கிராமங்களுக்கு செல்ல உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக 70 கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டும். மலைப்பகுதி ரோட்டை பயன்படுத்தினால் 20 கி.மீ.,தூரத்தில் இக் கிராமங்களுக்கு சென்று விடலாம். நேரம், எரிபொருள் மிச்சமாகும். கடந்த காலங்களில் பஸ் வசதி இருந்த போது முத்தாலம்பாறை, தாழையூத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் மல்லப்புரம் பகுதியில் இருந்த விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். விவசாய பணிகளுக்கும், விளைபொருள் விற்பனைக்கும் எளிதாக இருந்தது. தற்போது விளை பொருட்களை கொண்டு செல்ல வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கூடுதல் செலவாகிறது.