/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வி.ஏ.ஓ., பலி போடியில் நண்பர்களுடன் அருவியில் குளித்த போது சோகம்
/
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வி.ஏ.ஓ., பலி போடியில் நண்பர்களுடன் அருவியில் குளித்த போது சோகம்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வி.ஏ.ஓ., பலி போடியில் நண்பர்களுடன் அருவியில் குளித்த போது சோகம்
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வி.ஏ.ஓ., பலி போடியில் நண்பர்களுடன் அருவியில் குளித்த போது சோகம்
ADDED : அக் 10, 2025 09:26 PM

போடி:தேனி மாவட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை மலைப்பகுதி அருவியில் குளித்த போது திடீரென பெய்த கன மழை, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மதுரை மாவட்டம் பேரையூர் அப்பக்கரை வி.ஏ.ஓ., மதுரைவீரன் 42, பலியானார்.
போடி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 42. இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் அபிபட்டியில் வருவாய்த்துறை ஆர்.ஐ., ஆக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க நண்பர்கள் பேரையூர் அருகே செங்குளம் வி.ஏ.ஓ., முத்துக்காளை, பேரையூர் வி.ஏ.ஓ., காளிதாஸ், சிட்டுதொட்டி வி.ஏ.ஓ., சக்கரை, டி.கல்லுப்பட்டி வி.ஏ.ஓ., சக்திவேல், அப்பகரை வி.ஏ.ஓ., மதுரை வீரன் 42, ஆகியோரை அழைத்து வந்தார். அனைவரும் கோயில் திருவிழாவில் பங்கேற்றனர்.
பின் நேற்று முன்தினம் மதியம் போடி வடக்குமலை ஊத்தாம்பாறை கருப்பசுவாமி கோயில் அருகே உள்ள அருவியில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஆறு பேர் என 12 பேர் குளிக்க சென்றனர்.
அருவில் குளித்த போது திடீரென பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் 12 பேரில் வி.ஏ.ஓ., மதுரைவீரன் தவிர மற்ற 11 பேரும் ஆற்றை கடந்து வந்தனர். வெள்ளத்தில் சிக்கிய மதுரை வீரனை கண்டுபிடிக்க முடியவில்லை. பின் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போடி தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் குரங்கணி போலீசார், தீயணைப்புத்துறையினர் நேற்று முன் தினம் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர். நேற்று முன் தினம் இரவு இருள், வனவிலங்குகள் நடமாட்டம் போன்ற காரணங்களால் தொடர்ந்து தேட முடியாமல் திரும்பினர். நேற்று காலை சென்று மீண்டும் தேடிய போது அரை கி.மீ., தூரத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் பாறை இடுக்கில் சிக்கி மதுரைவீரன் இறந்து கிடந்தார். உடலை மீட்டு போடி அரசு மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பினர். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர். மதுரைவீரன் சொந்த ஊர் நரிக்குடி. மனைவி ராமதிலகம் 32, மூன்று குழந்தைகள் உள்ளனர்.