/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு 'சோலைக்குள் கூடல்'-... அசத்தல்; 334 வாரங்களாக தொடர் நடவு பராமரிப்புடன் விழிப்புணர்வு

ADDED : ஜன 15, 2024 12:01 AM

கூடலுார் : கூடலுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் 334 வாரங்களில் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து 8 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து, சூழல் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 'சோலைக்குள் கூடல்' அமைப்பினர் அனைத்து மரக்ககளையும் பராமரித்து வளர்த்து, அசத்தி வருகின்றனர்.
இவ்வூரில் 'சோலைக்குள் கூடல்' அமைப்பு 2015ல் துவக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என 65 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பு துவங்கப்பட்ட முதல் மாதத்திலேயே கால்வாய் கரைப்பகுதி, சாலை ஓரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கருவேல முள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கண்மாய் கரைப்பகுதி, 18 ம் கால்வாய் கரைப்பகுதி, குள்ளப்பகவுண்டன்பட்டி சாலை, தாமரைக்குளம் நுனிக்கரை ரோடு, லோயர்கேம்ப், கூடலூர், கம்பம் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகளை நடவு செய்து தொடர் பராமரிப்பில் ஈடுபட்டனர்.
அரசமரம், அத்தி, ஆலமரம், வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, நாவல், வில்வம், இலுப்பை, செண்பகம், நீர் மருது ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நேற்று 334வது வாரத்தில் 8 ஆயிரமாவது மரக்கன்றாக அரசமரத்தை நடவு செய்தனர். மரக்கன்றுகளை நடவு செய்வது மட்டுமின்றி அதை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். கடுமையான கோடை காலங்களில் வாகனங்களில் தண்ணீரைக் கொண்டு சென்று மரக்கன்றுகளுக்கு ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் நடவு செய்த தாமரைக்குளம் ரோடு, பூங்கா பள்ளி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமை சோலையாக மாறியுள்ளது.
சமீபத்தில் அரசு சார்பில் இவர்களுக்கு 'பசுமை முதன்மையாளர் விருது' வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இவர்கள் செய்து வரும் இச்செயலை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. தொடர்ந்து 334 வது வாரமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.