/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவதி: 2 கி.மீ., நடந்து பஸ்சில் பயணிக்கும் செவிலியர் கல்லுாரி மாணவிகள்: 'டீசல்' ஒதுக்கீட்டை குறைத்ததால் கேள்விக்குறியான பாதுகாப்பு

ADDED : ஆக 30, 2025 04:29 AM

ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு 2016ல் துவங்கப்பட்ட செவிலியர் கல்லுாரியில் நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் முறையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நடப்பாண்டில் 168 மாணவிகளும், 29 மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்களில் நான்காம் ஆண்டு மாணவ, மாணவிகள் 43 பேர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். மீதியுள்ள 154 மாணவ, மாணவிகள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இரு பாலருக்கான செவிலியர் விடுதியில், தங்கி மருத்துவக் கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் கல்லுாரிக்கு சென்று வர 52 இருக்கைகள் கொண்ட ஒரு பஸ், 25 இருக்கைகள் கொண்ட மினி பஸ் என 2 வாகனங்கள் 2 டிரிப் இயக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக 52 இருக்கைகள் கொண்ட ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் சுழற்சி முறையில் 52 மாணவிகளை கல்லுாரி பஸ்சில் அழைத்து செல்கின்றனர்.
எஞ்சிய 100க்கும் மேற்பட்ட மாணவிகள் 2 கி.மீ., துாரம் நடந்து பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து தேனி சென்று, பின் அங்கிருந்து மருத்துவக் கல்லுாரிக்கு தனியார் பஸ்களில் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஒவ்வொரு மாணவியும் கல்லுாரிக்கு சென்று வர தினமும் ரூ.60 செலவிடுகின்றனர். தனியார் பஸ்களில் செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால், மாணவிகள் வேதனையில் தவிப்பது தொடர்கிறது. மழை காலங்களில் மாணவிகளின் சிரமம் அதிகரிக்கிறது.
மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் டீசல் ஒதுக்கீட்டை குறைத்து ஒரு பஸ் மட்டும் இயக்க அனுமதிப்பதால், மினி பஸ் இயக்கப்படாமல் ஓரம் கட்டி விட்டனர். மாணவிகள் பாதுகாப்பு கருதி இரு பஸ்களும் 2 டிரிப் இயக்கிட மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.