/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்து நஷ்டஈடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி
/
விபத்து நஷ்டஈடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி
ADDED : பிப் 02, 2025 06:30 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவில் இரு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
பெரியகுளம் தென்கரை பாரதிநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 55. டி.கள்ளிப்பட்டியில் கே.ஆர்.ஜி., மரக்கடை நடந்து வந்தார். 2018 நவ. 21ல் கடையில் இருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். பெரியகுளம் தேனி ரோட்டில் தனியார் பள்ளி அருகே தேனியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து நஷ்ட ஈடு வழங்க கோரி கோவிந்தராஜ் மனைவி ஆண்டாள், தாயார் கோவிந்தம்மாள் பெரியகுளம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி திலகம் 2021ல் விபத்து நஷ்ட ஈடாக ரூ.33 லட்சத்து 33 ஆயிரத்து 663 வழங்க வேண்டும் என கோவை மண்டல அரசு போக்குவரத்து நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். டெப்போ நிர்வாகம் வழங்கவில்லை.
நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நஷ்டஈடு தொகை வட்டியுடன் ரூ.44 லட்சம் செலுத்த வேண்டும். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீனா கோவை மண்டல பஸ் டெப்போவின் இரு அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று அமீனா ரமேஷ், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் பெரியகுளம் புது பஸ் ஸ்டாண்ட் பிரிவில், தேனியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற பஸ் (டி.என்.38 என் 3246) மற்றும் குமுளியிலிருந்து ஈரோடு சென்ற பஸ் (டி.என்.33 என் 3548) இரு அரசு பஸ்களை 10 நிமிடம் இடைவெளியில் அடுத்தடுத்து ஜப்தி செய்தனர். இரு பஸ்களிலும் இருந்த 40 க்கும் அதிகமான பயணிகள் இறங்கி விடப்பட்டனர். இரு பஸ்களும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.-