ADDED : அக் 09, 2025 05:20 AM

மூணாறு : மூணாறில் காட்டு யானைகள் இரண்டு கடைகளை சேதப்படுத்தின.
மூணாறைச் சுற்றி வழக்கத்தை விட இரண்டு நாட்களாக காட்டு யானைகள் பல பகுதிகளில் நடமாடின. குறிப்பாக பிரபல படையப்பா ஆண்காட்டு யானை நகரையொட்டி பொறியியல் கல்லூரி அருகே நடமாடியதால், அந்த வழியில் பெரியவாரை எஸ்டேட் டாப் டிவிஷனுக்கு தொழிலாளர்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
தப்பினர்: மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் எதிர்பாராத வகையில் ஒரு தந்தம் மட்டும் உள்ள ஒற்றை கொம்பன் வந்தது.
அப்போது அங்குள்ள கேன்டீன் முன்பு பேசிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிதறி ஓடி உயிர் தப்பினர். அந்த யானை நேற்று காலை கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கினுள் நுழைந்து கழிவுகளை தின்றது.
கடைகள் சேதம்: மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஐந்து யானைகளைக் கொண்ட கூட்டம், அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நடமாடின.
அங்கு இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைலிலில் ரோட்டோரம் உள்ள பிஜூ, முருகன் ஆகியோரது கடைகளை சேதப்படுத்தி விட்டு சோளம் உள்பட உணவு பொருட்களை தின்றது.