/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி இன்றி தவிப்பு; முடித்த வேலைக்கு சம்பளம் வழங்காததால் அவதி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி இன்றி தவிப்பு; முடித்த வேலைக்கு சம்பளம் வழங்காததால் அவதி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி இன்றி தவிப்பு; முடித்த வேலைக்கு சம்பளம் வழங்காததால் அவதி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி இன்றி தவிப்பு; முடித்த வேலைக்கு சம்பளம் வழங்காததால் அவதி
ADDED : மார் 02, 2024 04:24 AM
தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்வதற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்ற உத்திரவாதத்துடன் மத்திய, மாநில அரசுகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வேலைக்குச் செல்லும் பயனாளிக்கு நாள் ஒன்றுக்கு செய்து முடித்த பணி அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.260 சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
குளங்கள், நீர் வரத்துக்கால்வாய்கள் தூர்வாறுதல், மரக்கன்றுகள் வளர்ப்பு உட்பட பல்வேறு பணிகள் அந்தந்த ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்து பணிமுடிந்த பின் அரசு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு 70 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும் பிரித்து வழங்குகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கோடையால் வேளாண் பணி குறைந்தது
கடந்த ஐந்து மாதமாக ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு பணிகள் ஒதுக்கவில்லை. ஏற்கனவே வேலை செய்த பணிகளுக்கும் சம்பளம் கணக்கிட்டு வழங்கவில்லை. இதனால் இத்திட்டத்தை நம்பி இருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் தவிக்கின்றனர். 40 முதல் 50 வயதை கடந்த பெண் பயனாளிகள் இத்திட்டத்தில் அதிகளவில் உள்ளனர்.
இவர்களால் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியவில்லை. மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன. தற்போது கோடை தொடங்கியதால் விவசாய பணிகளும் குறைந்துள்ளது. எனவே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் பணிகளை தேர்வு செய்து வழங்க பயனாளிகள் வலியுறுத்துகின்றனர்.
இலக்கை எட்டிய திட்டம்
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் பணி ஒதுக்கீட்டின் இலக்கு செப்டம்பரில் நூறு சதவீதம் முடிந்து விட்டது.
அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அடிப்படையில் பணிகள், பயனாளிகள் தேர்வு செய்ய வேண்டும்.
இலக்கை விட கூடுதலாக திட்டத்தில் பணிகள் தேர்வு செய்வதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வரும் ஏப்ரல், மே மாதத்திற்குப் பின் மீண்டும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி வழங்கும் நிலை உள்ளது என தெரிவித்தனர்.

