/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இ சேவை மையத்தினர் தாராள வசூல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இ சேவை மையத்தினர் தாராள வசூல்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இ சேவை மையத்தினர் தாராள வசூல்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இ சேவை மையத்தினர் தாராள வசூல்
ADDED : ஆக 21, 2025 08:22 AM
கூடலுார், : கூடலுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பட்டா மாறுதலுக்காக மனு செய்தவர்களிடம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதாக கூறி ரூ.100 வசூல் செய்ததால் மனுதாரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
கூடலுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 4, 5, 6 வார்டுகளுக்கான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 11 மனுக்களும், வருவாய்த் துறையில் 36 மனுக்களும், மகளிர் உரிமை தொகைக்காக 453 மனுக்களும், மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு 37 மனுக்களும் உட்பட மொத்தம் 601 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் வருவாய்துறையில் பட்டா மாறுதலுக்காக மனு செய்தவர்களிடம் தனியார் இ சேவை மையத்தினர் அலைபேசியில் தொடர்பு கொண்டு மனுவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி பணத்தை வசூல் செய்துள்ளனர்.
அரசு சார்பில் இலவசமாக நடத்தும் இந்த முகாமில் பணம் வசூல் செய்வதால் பொது மக்கள் புலம்பி வருகின்றனர்.
தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.