/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் அரசு சிறப்பு அனுமதி வழங்க வலியுறுத்தல்
/
கம்பம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் அரசு சிறப்பு அனுமதி வழங்க வலியுறுத்தல்
கம்பம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் அரசு சிறப்பு அனுமதி வழங்க வலியுறுத்தல்
கம்பம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் அரசு சிறப்பு அனுமதி வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 26, 2024 05:34 AM
கம்பம்: கம்பம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க அரசின் நிபந்தனையை தளர்த்தி சிறப்பு அனுமதி தர அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் நகராட்சிகளை தவிர்த்து பிற 4 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 68,090 ஆக உள்ளது. தற்போது 75 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. கம்பத்தில் பாதாள சாக்கடை அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுப் பணிக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கப்பட்டது. ஆனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போதிய இடவசதி இல்லையென கூறி திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பாதாள சாக்கடை இல்லாத ஊர்களுக்கு அரசு சமீபத்தில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி கம்பத்தில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் மையம் அமைத்து செயல்படத் துவங்கி உள்ளது.
கசடு கழிவு நீர் மையம் என்றால் என்ன
செப்டிக் டேங்க் கழிவுகளை கசடு கழிவு நீர் மையத்தில் சேர்ப்பார்கள். அங்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்து செப்டிக் டேங்க் கழிவு உரமாக மாற்றி விவசாயிகளுக்கு விற்பனை செய்வார்கள். அதேபோன்று சேகரமாகும் செப்டிக் டேங்க் நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துவார்கள்.
கம்பம் கசடு கழிவு நீர் மையத்தில் கம்பம் நகராட்சி மட்டுமல்லாது, காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி பேரூராட்சிகள், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் சேகரமாகும் செப்டிக் டேங்க் கழிவுகளை மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிபந்தனையில் தளர்வு வேண்டும்
இது குறித்து கம்பம் நகராட்சி விசாரித்த போது, மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் போது ஒரு லட்சம் மக்கள் தொகை என்ற நிபந்தனை இல்லை. சமீபத்தில் தான் அரசு அந்த நிபந்தனையை விதித்துள்ளது. எனவே கம்பத்தில் பாதாள சாக்கடை அமைக்க முடியவில்லை. பாதாள சாக்கடை இல்லாத ஊர்களுக்கு மாற்றாக தான் கசடு கழிவு நீர் மையம் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது . கம்பத்தில் கசடு கழிவுநீர் மையம் செயல்பாட்டில் உள்ளது.
பாதாள சாக்கடையில் அனைத்து கழிவு நீர்களும் செல்லும். ஆனால் கசடு கழிவு நீர் மையத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் மட்டும் மறு சுழற்சி செய்யப்படும். அதுவே பிரதானமானது என்றனர்.
ஒரு லட்சம் மக்கள் தொகை என்ற நிபந்தனையை தளர்த்தி கம்பத்திற்கு பாதாள சாக்கடை அமைக்க சிறப்பு அனுமதி தர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

