/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் 4 மாதங்களாக செயற்பொறியாளர் பணியிடம் காலி உடனடியாக நியமிக்க வலியுறுத்தல்
/
பெரியாறு அணையில் 4 மாதங்களாக செயற்பொறியாளர் பணியிடம் காலி உடனடியாக நியமிக்க வலியுறுத்தல்
பெரியாறு அணையில் 4 மாதங்களாக செயற்பொறியாளர் பணியிடம் காலி உடனடியாக நியமிக்க வலியுறுத்தல்
பெரியாறு அணையில் 4 மாதங்களாக செயற்பொறியாளர் பணியிடம் காலி உடனடியாக நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2025 02:12 AM

கூடலுார்:முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரச்னைக்கு உரியதாகவும் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 4 மாதங்களாக காலியாக உள்ள செயற்பொறியாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் தேங்கியிருக்கும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் உள்ளது.
அணை கேரளாவில் இருப்பதால் ஆண்டு தோறும் இதற்கான குத்தகை பணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. 1895ல் இருந்து மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், தேக்கடி ஷட்டர், ஆய்வாளர் மாளிகை, குடியிருப்புப் பகுதிகள், அலுவலகம் ஆகிய அனைத்தும் தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணை பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது.
இதற்காக அணைக்கு தனியாக செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பணியாளர்கள் என அணைப்பகுதியில் உள்ளனர்.
அணையில் செயற்பொறியாளராக இருந்த சாம்இர்வீன் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்று மதுரையில் உள்ளார்.
இதனால் கடந்த 4 மாதங்களாக அணையில் நிரந்தர செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
சாம்இர்வீன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னையில் சிக்கி வரும் பெரியாறு அணையில் நிரந்தர செயற் பொறியாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்டாலின், மதுரை மேலுார் விவசாய சங்க நிர்வாகி: முல்லைப் பெரியாறு அணையில் இரு மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.
திடீரென ஏற்படும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நிரந்தர செயற்பொறியாளர் அணையில் இருக்க வேண்டும்.
தற்போது கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் அதிகாரி மதுரையில் இருப்பதால் சிக்கல் ஏற்படும்.
பேபி அணையில் பலப்படுத்தும் பணிக்கு இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்டி பலப்படுத்தும் பணியை விரைவில் துவக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது தமிழக அரசுக்கு சாதகமானதாகும். இந்த நேரத்தில் அணைக்கு நிரந்தர செயற் பொறியாளரை உடனடியாக நியமிக்க அரசு முன் வர வேண்டும்.