/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுள்ளக்கரை ஓடையை அகலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல் - கூடலுாரில் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை

ADDED : நவ 02, 2025 06:09 AM

கூடலுார்: கூடலுாரில் சுள்ளக்கரை ஓடையை அகலப்படுத்தி முழுமையாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும், கனமழையால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் கூடலுார் மையப் பகுதியில் உள்ள சுள்ளக்கரை ஓடை வழியாக வெளியேறி முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.
இவ்வாறு செல்லும் போது ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து வருவது வழக்கமாக இருந்தது.
இதனால் ஓடையில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர்.
இதனால் சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் இப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவங்கியது. ஆனால் முழுமையாக செய்யாமல் ஒரு இடத்தில் மட்டும் தடுப்புச் சுவர் அமைத்தது.
சமீபத்தில் பெய்த கனமழையால் சுள்ளக்கரை ஓடையில் வெளியேறிய காட்டாற்று வெள்ளநீர் கடந்து செல்ல முடியாமல் ஒட்டியுள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் புகுந்தது. மேலும் மாநில நெடுஞ்சாலையில் கடந்து சென்றதால் ஓடையில் வெளியேறிய மண் முழுவதும் ரோட்டில் குவிந்தது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
அருகில் இருந்த மின்டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கி சீரமைப்பு பணிகளை துவக்கியது.
இருந்த போதிலும் ஏராளமான வீடுகளுக்குள் மழை நீருடன் மண் சேர்ந்து புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் ஓடையை அகலப்படுத்தி முழுமையாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி னர்.