/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிரம்பியது வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிரம்பியது வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 07, 2024 02:24 AM

ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடியாக உயர்ந்து நிரம்பியதால் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் அணை நீர்மட்டம் நவ.9ல் உச்சபட்சமாக 70.51 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு உபரியாக வந்த நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
நவ.10 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கும், நவ.23 முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதால், டிச.,8ல் அணை நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரும் வெளியேறும் நீரும் சில நாட்கள் சமன் செய்யப்பட்டு வந்தது.
தேனி மாவட்டத்தில் மீண்டும் பெய்த மழையால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று அதிகாலை 4:45 மணிக்கு 71 அடியாக உயர்ந்து அணை நிரம்பியது. தற்போது வைகை அணை நீர்த்தேக்க பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
அணை நிரம்பியதால் அணைக்கு உபரியாக வினாடிக்கு 3106 கன அடி வீதம் வந்த நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வினாடிக்கு 2531 கனஅடியாக குறைந்தது.
கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக பாசனத்திற்கு நீர் தொடர்ந்து வெளியேறியதால் குறைந்த நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து அணை நிரம்பியுள்ளது.
தற்போது வைகை அணையில் உள்ள நீரின் இருப்பு வரும் ஜூன் மாதம் துவங்கும் நெல் முதல் போகத்திற்கும், செப்டம்பரில் துவங்கும் 2ம் போகத்திற்கும் கை கொடுக்கும் வாய்ப்புஉள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.