/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
66 அடியை நெருங்கும் வைகை அணை : நாளை வெள்ள அபாய எச்சரிக்கை
/
66 அடியை நெருங்கும் வைகை அணை : நாளை வெள்ள அபாய எச்சரிக்கை
66 அடியை நெருங்கும் வைகை அணை : நாளை வெள்ள அபாய எச்சரிக்கை
66 அடியை நெருங்கும் வைகை அணை : நாளை வெள்ள அபாய எச்சரிக்கை
UPDATED : ஜூலை 25, 2025 06:14 AM
ADDED : ஜூலை 25, 2025 01:36 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் இந்தாண்டு முதல்முறையாக 66 அடியை நெருங்குகிறது. இன்று அல்லது நாளை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
இந்த அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். கேரளாவில் பெய்யும் மழையால் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கணிசமான அளவில் நீர் திறந்து விடப்படுகிறது. சில வாரங்களாக தொடரும் நீர் வரத்தால் அணை நீர்மட்டம் நேற்று காலை 65.12 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததும் அணையிலிருந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.
நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1744 கன அடியாக இருந்தது. அணையில் வெளியேறும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது.
வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அணை நீர்மட்டம் இன்று (ஜூலை 25) இரவு அல்லது நாளை 66 அடியானதும் அணையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். நீர்மட்டம் 68.50 அடியாகும் போது 2ம் கட்ட எச்சரிக்கை விடப்படும். நீர்மட்டம் 69 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியேற்றப்படும் என்றனர்.

