/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்வரத்து தொடர்வதால் நிரம்புது வைகை அணை 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
/
நீர்வரத்து தொடர்வதால் நிரம்புது வைகை அணை 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்வதால் நிரம்புது வைகை அணை 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்வதால் நிரம்புது வைகை அணை 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஆக 06, 2025 12:17 AM

ஆண்டிபட்டி:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வருவதால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை நிரம்பி வருகிறது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. சில வாரங்களாக தொடரும் நீர் வரத்தால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று நீர் மட்டம் 69 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணையில் மதியம் 12:00 மணிக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்குப் பிறகு அணை நீர்மட்டம் தற்போது முழு அளவை எட்டி வருகிறது. தற்போது 35 வது முறையாக முழு கொள்ளளவை நெருங்குகிறது.
வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அணை நீர்மட்டம் 69 அடியாக உயரும்போது நீர்வரத்தை பொறுத்து அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது நீர் வரத்து குறைவாக இருப்பதால் அணையின் முழு அளவான 71 அடி வரை நீர்தேக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கான சூழல் தொடர்வதால் நீர் வரத்து உயரும் வாய்ப்புள்ளது.
இதனால் அணை நீர்மட்டம், நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் சூழல் இருப்பதால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட ஆற்றின் கரையோரங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1577 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. குடிநீருக்காக 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.