ADDED : ஏப் 09, 2025 07:09 AM

ஆண்டிபட்டி : கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து பெய்த கோடை மழையால் காய்ந்து கிடந்த வைகை அணை பூங்காவில் தற்போது பசுமை படர்ந்து குளுமையாக காட்சியளிக்கிறது.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. கேரளா, கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பூங்கா பார்த்து ரசித்து செல்வர். பரந்து விரிந்த நீர்த்தேக்கம், வலது, இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளன. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வைகை அணை பூங்காவில் மரம், செடி, கொடிகள் காய்ந்து அதிக சருகுகளுடன் இருந்தன. புல் தரைகளும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து பெய்த கோடை மழையால் வைகை அணை பூங்காவில் உள்ள செடி, கொடிகள், புல் தரைகள், மரங்கள் புத்துணர்வு பெற்று பசுமையுடன் குளுமையாக காட்சியளிக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான தேர்வு காலம் என்பதால் தற்போது குறைவான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.