ADDED : டிச 15, 2024 01:13 AM
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிடைக்கும் நீரும் குன்னுார் வழியாக வைகை அணைக்கு சென்று சேர்கிறது.
டிச. 12 ல் இரவில் துவங்கிய மழை, பலத்த மழையாக விடிய விடிய பெய்தது. தற்போது வரையும் விட்டுவிட்டு சாரல் மழையாக தொடர்கிறது.
வைகை அணைக்கு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1039 கன அடியாக இருந்த நீர் வரத்து, மதியம் 2:00 மணிக்கு 10,279 கன அடியாகவும் இரவு 8:00 மணிக்கு வினாடிக்கு 15,775 கன அடியாக உயர்ந்து பின் படிப்படியாக குறைந்தது.அணைக்கு வந்த அதிக நீர் வரத்தால் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு 49.67 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மதியம் 1:00 மணிக்கு 56.66 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது. (மொத்த உயரம் 71 அடி).
நீர் வரத்து 7088 கன அடியாக இருந்தது.
மழை பெய்து வருவதால் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.