
பெரியகுளம், : வடுகபட்டியில் நடந்த வள்ளலார் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வள்ளலார் நகரில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையின் 203 வது வள்ளலார் பெருவிழா நடந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மதியம் 1:00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
நேற்று பெருவிழா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் துவங்கியது. திருவருட் பிரகாச வள்ளலாரின் திருஉருவப்படம் நகர் வலம் எடுத்துவரப்பட்டது. பேராசிரியர் வெங்கடேஸ்வரன் 'வள்ளலார் முழுமை நலச்சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினார்.
அன்னதானத்தை பேராசிரியர் சதுரகிரி துவக்கி வைத்தார். டாக்டர் செல்வராஜ், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், துணைத் தலைவர் அழகர், ஆன்மிக பக்தர்கள் பழனிசாமி, திருப்பதிசாமி, ராஜாராம், சமூக ஆர்வலர்கள் மணிகார்த்திக், அன்புக்கரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தலைவர் ரத்தினவேல், செயலாளர் வீரபுத்திரன், பொருளாளர் வாசுமணி, சமரச சன்மார்க்க சத்திய ஞானசபை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.