/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரப்ப நாயக்கன், ஒட்டு ஒடப்படி கண்மாய்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு துார்வார பாசன விவசாயிகள் கோரிக்கை
/
வீரப்ப நாயக்கன், ஒட்டு ஒடப்படி கண்மாய்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு துார்வார பாசன விவசாயிகள் கோரிக்கை
வீரப்ப நாயக்கன், ஒட்டு ஒடப்படி கண்மாய்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு துார்வார பாசன விவசாயிகள் கோரிக்கை
வீரப்ப நாயக்கன், ஒட்டு ஒடப்படி கண்மாய்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு துார்வார பாசன விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 17, 2024 06:21 AM

கம்பம்: கம்பத்தில் உள்ள கண்மாய்களில் பிரதானமானதாக கருதப்படும் வீரப்ப நாயக்கன், ஒட்டு ஒடப்படி கண்மாய்களில் ஆகாயத்தாமரை முழுவதும் படர்ந்து, 'கண்மாய்களை காணவில்லை' என்ற நிலையில் தேட வேண்டிய நிலை தொடர்கிறது.
கண்மாய்கள் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், பாசன வசதிகளுக்காகவும், மேய்ச்சல் கால்நடைகளின் குடிநீர் தேவையை போக்கவும் பயன்படுகின்றன. கோடை காலங்களில் கண்மாய்களின் தேவை அதிகமாக இருக்கும். பண்டை காலங்கள் தொட்டே கண்மாய்கள் வேளாண்மையில் முக்கிய பங்காற்றி வந்துள்ளன.
ஆனால் சமீப காலமாக கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிக்கப்படாமலும் கேட்பாரற்று கிடக்கின்றன. மடைகள் பழுதடைந்தும், கண்மாய் கரைகள் சேதமடைந்தும் உள்ளன.
கம்பம் வீரப்ப நாயக்கன் குள கண்மாய், ஒட்டு ஒடப்படி குளங்கள் இதே நிலையில் தான் உள்ளன. ஒரே இடத்தில் 3 கண்மாய்கள் இருப்பது இங்கு மட்டுமே அமைந்துள்ளது. ஒட்டு, ஒடப்படி கண்மாய்களில் துார்வாரி ஆண்டுகள் பல கடந்து விட்டன.
எனவே ஆகாயத்தாமரை முழுவதும் படர்ந்து கண்மாயை எங்கே என தேட வேண்டிய நிலை தொடர்கிறது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. மற்றொரு பக்கம் உள்ள வீரப்ப நாயக்கன் குளம், நகரின் கழிவுநீர் அனைத்தும் சேகரமாகும் இடமாக மாறியுள்ளது.
சேனை ஒடை வழியாக வரும் கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவுகள், இறைச்சி, கோழிக்கறி கடை கழிவுகள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் என அனைத்தும் இந்த கண்மாய்க்கு வந்து சேர்கிறது.
வரும் கழிவு நீரை சுத்திகரித்து கண்மாய்க்குள் விட நகராட்சி ரூ.50 லட்சம் வரை செலவழித்தும், பணிகளை அரைகுறையாக பாதியில் நிறுத்திவிட்டது. இதனால் வீரப்ப நாயக்கன் குளம், சாக்கடை குளமாக மாறி விட்டது.
பாசனத்திற்கு இதில் இருந்து தண்ணீர் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மறுபுறம் உள்ள ஒட்டு ஒடப்படி குளங்களில் மண் மேவி மேடாகியும், ஆகாயத்தாமரை வளர்ந்தும் இருப்பதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை தொடர்கிறது.
துர்நாற்றம்
சுகுமாறன், செயலாளர், கம்பம் விவசாயிகள் சங்கம்: வீரப்பநாயக்கன் குளம், ஒட்டு ஒடப்படி குளங்களை பராமரிக்க பொதுப்பணித் துறை முன்வர வேண்டும். ஒட்டு ஒடப்படி குளங்களில் உடனே துார்வாரி, தண்ணீர் தேக்க வேண்டும்.
தண்ணீர் இல்லாததால் பாசன வசதி பாதிக்கப்படும். கரைகளை பலப்படுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ளது. திறந்தவெளி பாராகவும் உள்ளது. மழை பெய்தால் விவசாயிகள் இந்த கரையை பயன் படுத்த முடியாத நிலை உள்ளது.-
சாக்கடை தண்ணீர் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
அதிகாரிகள் ஆய்வு அவசியம்
சிவசெல்லப்பா, வேளாண் இணை இயக்குனர் ( ஓய்வு), கம்பம்: நுாற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதிக்கு என அமைக்கப்பட்டது வீரப்ப நாயக்கர், ஒட்டு ஒடப்படி கண்மாய்கள், கம்பத்தில் மட்டுமே இந்த அமைப்பு உள்ளது.
சுருளிப்பட்டி ரோட்டையும், காமயகவுண்டன்பட்டி ரோட்டையும் இணைக்கிறது. பராமரிப்பிற்கு அதிக நிதி தேவைப்படும்.
எனவே அரசு இந்த கண்மாயில் படகு சவாரி அமைக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி பராமரிப்புப் பணிகள் செய்யலாம். கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு நேரடியாக களம் இறங்க வேண்டும்.
சுற்றுப்புறச் சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, -தேவையான நிதியை ஒதுக்கி, நகராட்சி மூலம் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளும், பொது மக்களும் ஒரு சேர பயனடைவர். அதற்கான முன் முயற்சியை நகராட்சி, மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும், என்றார்.