ADDED : பிப் 11, 2024 01:43 AM
மூணாறு: மூணாறில் தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான மையத்தில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய பரிசோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை, மறையூர், காந்தலூர் ஆகிய பகுதிகளில் முக்கிய தொழில் காய்கறி சாகுபடியாகும். அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு வசதியாக மூணாறில் தோட்டக் கலை துறை சார்பில் மையம் உள்ளது.
அங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், விவசாயிகளிடம் கொள் முதல் செய்த காய்கறிகளுக்கு உரிய தொகையை வழங்காத நிலையில் தொடர்ந்து நிதி செலவழிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
அதனால் தொடுபுழா விஜிலென்ஸ் போலீசார் தோட்டக் கலைதுறை மையத்தில் சோதனையிட்டனர்.
அதில் மாவட்ட அளவில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தெரியவந்தது. குறிப்பாக 2021ல் கொரோனா பாதித்து இறந்த டிரைவர் பெயரில் போலி ரசீது மூலமும், உபயோகமற்ற வாகனத்தை பயன்படுத்தியதாக பண மோசடி செய்ததும், 2023 மார்ச் 30ல் மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் வங்கி கணக்கிற்கு ரூ.59,500 மாற்றியதும் தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
ஊராட்சியில் விஜிலென்ஸ் சோதனை
மூணாறு ஊராட்சியில் 2015 முதல் 2020 வரையிலான கால அளவில் நிதி கையாளப்பட்டதில் முறைகேடு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திலும், ஊராட்சி சார்பில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்ததிலும் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக தொடுபுழா விஜிலென்ஸ் போலீசார் மூன்று பேர் கொண்ட குழு நேற்று ஊராட்சி அலுவலகத்தில் சோதனையிட்டனர்.
அதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால், அச்சம்பவங்கள் தொடர்பாக சில உறுப்பினர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

