ADDED : ஜன 13, 2024 01:22 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த 2 நாட்களாக முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
வைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டியதாலும், தேனி மாவட்டத்தில் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் ஜன. 10ல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில் நேற்று காலை மீண்டும் வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 563 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6773 மில்லியன் கன அடியாகும். நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை. அணை நீர்மட்டம் 138.60 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
பெரியாறு அணையில் திறக்கப்பட்ட நீர் மூலம் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரில்27 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.