ADDED : அக் 30, 2025 03:40 AM

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வசதி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே இதில் தண்ணீர் திறக்க முடியும்.
அக்., 25ல் அணை நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இதனால் 58 ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து நேற்று மதியம் 3:30 மணிக்கு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி எம்.பி.தங்கதமிழ்செல்வன் ஆகியோர் அணையின் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டனர்.
அதிகாரிகள் கூறியதாவது: 58ம் கால்வாயில் நேற்று முதல் வினாடிக்கு 150 கன அடி வீதம் செல்லும் நீரால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1912 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்றனர்.

