/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நீர்வளத்துறை முடிவு
/
சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நீர்வளத்துறை முடிவு
சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நீர்வளத்துறை முடிவு
சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த நீர்வளத்துறை முடிவு
ADDED : ஜூலை 28, 2025 05:06 AM
ஆண்டிபட்டி : வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணத்தை உயர்த்த நீர்வளத் துறையினர் முடிவு செய்த, அதற்கான திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணையை பார்த்து செல்ல தவறுவது இல்லை. பத்து சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்த வைகை அணை நீர்தேக்கம், வலது இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் முதன் முறையாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும்.
வைகை அணையில் வலது, இடது கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நுழைவு கட்டண வசூலில் மாற்றம் இல்லை. தற்போது கட்டணத்தை மாற்றி அமைக்க நீர்வளத் துறையினர் முடிவு செய்து, அதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து, அதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளனர்.
நீர்வளத் துறையினர் கூறியதாவது: தற்போது வைகை அணையில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 உள்ளது. இந்த நுழைவு கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தவும், டூவீலர்கள் நுழைவு கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆகவும், கார், வேன்களுக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.50 ஆகவும், சுற்றுலா பஸ்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.50ல் இருந்து, ரூ.100 ஆகவும், வலது கரை பூங்காவில் உள்ள உல்லாச ரயிலில் பயணிக்க சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.20 ஆக நிர்ணயம் செய்து அதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் கட்டண உயர்வு நடைமுறைப் படுத்துவதற்கான, அறிவிப்பு வெளியாகும்.
தற்போது வைகை அணையில் தனியார் மூலம் இயக்கப்படும் ராட்டினம், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம் ஆகியவை சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக உள்ளது என, தெரிவித்துள்ளனர்.