ADDED : ஜூலை 05, 2025 12:27 AM

மூணாறு; இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே புரப்புழா பகுதியில் கணவர், அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தலால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவரை போலீசார் கைது செய்தனர்.
புரப்புழா பகுதியைச் சேர்ந்தவர் டோனிமாத்யூ. இவரது மனைவி ஜோர்லி 34. இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் ஜூன் 26ல் ஜோர்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தொடுபுழாவில் தனியார் மருத்துவமனையில்அனுமதித்தனர்.புகார்: இந்நிலையில் கணவர், அவரது குடும்பத்தினர் மனம்,உடல் ரீதியாக துன்புறுத்தியதால் மகள் தற்கொலைக்கு முயன்றதாக ஜோர்லியின் தந்தை ஜான் கரிங்குன்னம் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் திருமணத்தின் போது 20 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்ததாகவும், பின்னர் கணவர் வீட்டாரின் வற்புறுத்ததால் ரூ.4 லட்சம் கொடுத்ததாகவும் ஜான் புகாரில் கூறியிருந்தார்.
விசாரணையில் கணவர் வீட்டில் ஜோர்லி கடும் கொடுமையை அனுபவித்ததாகவும், குடும்ப தகராறு காரணமாக சமீபத்தில் கணவர், மகள் ஆகியோருடன் வாடகை வீட்டிற்கு சென்றதாகவும் தெரியவந்தது. அங்கும் டோனிமாத்யூ மனைவி, மகள் ஆகியோரை துன்புறுத்தியதால் ஜோர்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடுபுழாவில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜோர்லி நேற்று முன்தினம் இறந்தார். கரிங்குன்னம் போலீசார் டோனிமாத்யூவை கைது செய்தனர்.