/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்புகள் அருகே நடமாடிய காட்டு யானை
/
குடியிருப்புகள் அருகே நடமாடிய காட்டு யானை
ADDED : நவ 20, 2025 03:38 AM

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் நேற்று பகலில் பீதியை ஏற்படுத்தும் வகையில் குடியிருப்பு அருகே காட்டு யானை நடமாடியது.
அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெண் காட்டு யானை நடமாடியது. கடந்த இரண்டு நாட்களாக இரவில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை வாழை உள்ளிட்டவைகளை தின்றது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு திடீரென குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை பீதியை ஏற்படுத்தும் வகையில் நடமாடியது. அதனை பார்த்த பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
யானை நடமாடியபோது தொழிலாளர்கள் மதிய உணவு அருந்த வீடுகளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். குடியிருப்புகள் அருகே நடமாடிய யானை தேயிலை தோட்டம் வழியாக கடந்து காட்டிற்குள் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

